கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

EIFFன் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க ஜமால் அப்துல் கபூர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPIயின் சென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது ஸாலிஹ் அவர்கள் அக்கட்சி குறித்து அறிமுகவுரை நிகழத்தினார்.

அடுத்ததாக, SDPIயின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. தெஹ்லான் பாக்கவி அவர்கள் “இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

SDPIயின் தமிழ் மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாக்கவி அவர்கள் சிறப்புரையில் கூறியதாவது:

இந்தியாவிற்காக, இந்தியா என்னும் நாட்டை உருவாக்கவும், இந்தியாவினுடைய விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரும் பாடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்கள். அப்படி தியாகம் செய்துள்ள இந்த முஸ்லிம்களின் நிலை சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மிகுந்த பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த உரிமைகள் கூட இன்று இல்லை. இந்நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் அரசியல் தளத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும். இன்று கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்று நாம் போராடுகிறோம், கவலைப்படுகிறோம்.

ஆனால் இந்நிலைக்கு முக்கியக் காரணம் அரசியல் தளத்தில் நாம் வலுவாக கால் பதிக்காததே. அரசியலில் வலுவாக காலூன்றிய சமூகங்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளன. அது இல்லாத காரணத்தினாலேயே முஸ்லிம்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ளனர்.

மேலும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழி நடத்துவதில் அகில இந்திய அளவில் ஒரு வெற்றிடம் உள்ளது. அதை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதே சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ).

துவங்கிய குறைந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக SDPI வளர்ந்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும். இந்தத் தேர்தலில் கிடைத்திடும் ஒன்றிரண்டு இடங்களைப் பற்றி கவலைப்படாமல் எதிர்கால சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அவரது உரையைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சமுதாய ஒற்றுமை தொடர்பான வினா எழுப்பப்பட்ட போது தமிழகத்தில் ஒன்றுபட்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்க்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தயார் என்பதை தமிழகத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டோம். ஆனால் அத்தகைய முயற்சிகளுக்கு மற்றவர்கள் தயார் இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே போன்று தொகுதிகளை முடிவு செய்துவிட்டு குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரிக்க கோருவது ஒற்றுமை முயற்சி ஆகாது என்று குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்ட முயற்சி கூட்டணிகள் அமைக்கப்படும் முன்பே நடைபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் (EIFF) நிர்வாகிகளில் ஒருவரான அப்துல் மஜீத் நன்றியுரை நவில, குடியரசு தின நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

0 கருத்துகள்: