மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த பிப்ரவரி மாதம், 2ம் தேதி, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முயற்சியில், லஷ்கர் - இ - தொய்பா, பப்பர் கால்சா இன்டர்நேனல், ஜெய்ஷ் -இ - முகமது, ஜமாத் - உத் - தாவா, லஷ்கர் - இ - ஜாங்வி, அல் - உமர் முஜாகிதீன், ஹிஜ் - உல் - முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.தென் மாநிலங்களை தாக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், இதற்காக இலங்கையில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளன.இவ்வாறு, அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013,23:40 IST
இதைப் படித்து விட்டு என்னையறியாமல் சிரித்து விட்டேன். இஸ்லாத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விட வேண்டும் என்று இந்துத்வா வாதிகள் பலவாறாக சிந்திக்கின்றனர். அதில் இந்த செய்தியும் ஒன்று. பாகிஸ்தான் காரனுக்கு மயிலாடுதுறைதான் தெரியுமா? இங்கு பேசும் தமிழ் மொழியாவது அவனுக்கு விளங்குமா? இங்கு குண்டு வைப்பதால் அவனுக்கு என்ன நன்மை? ஏதோ எல்லையோரத்தில் தனது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப அவ்வப்போது ஊடுருவல் என்ற நாடகம் அரங்கேற்றப்படும். இந்தியாவும் பாகிஸ்தானுமே இதை அவ்வப்போது செய்து வரும். மக்களுக்கும் இது பழகி விட்டது. அந்த செய்தியை மகாராஷ்ட்ர இந்துத்வாவாதி ஒருவர் திரித்து வெளியிட அதை நம்மூர் தினமலரும் பிரபலப் படுத்தியுள்ளது. இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சொன்னது? எனறெல்லாம் தினமலர் கவலைப்பட போவதில்லை. உளவுத் துறையிலிருந்து அரசின் அடி மட்டம் வரை மோடியின் ஆட்கள் வேலை பார்ப்பதால் இது போன்ற செய்திகளை இவர்களால் தைரியமாக உலவ விட முடிகிறது. இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதாவது ஒரு செய்தி வேண்டும். அவ்வளவே!
இஸ்லாம் தமிழகத்தில் நாள்தோறும் பரவலாக பரவி வருகிறது. இது காலாகாலமாக இந்து மதத்தை ஆண்டு கொண்டிருக்கும் மேல் சாதியைச் சேர்ந்த இந்துத்வ வாதிகளுக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்து மதம் அழிந்து விடுமே என்ற பயம் வேறு. வாதத்தால் இஸ்லாத்தை இந்த இந்துத்வ வாதிகளால் வெல்ல முடியாது. எனவே தான் இது போன்ற குறுக்கு வழிகளை அவ்வப்போது கையில் எடுக்கின்றனர். தானும் தனது குடும்பமும் சுற்றத்தார்களும் மாற்று மதத்தவர்களும் அமைதியாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் போது அதைக் கெடுக்க எந்த முஸ்லிமாவது அல்லது எந்த ஹிந்துவாவது முயல்வானா? இதை நடுநிலைவாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எங்கெல்லாம் முஸ்லிம்கள் சற்று வசதி வாய்ப்புகளோடு உள்ளார்களோ அங்கு சென்று அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பது இவர்களின் வாடிக்கை. குஜராத்தில் அதைத்தான் செய்து காட்டினர். கோயம்புத்தூரிலும் அதே பாணியைத்தான் கையாண்டனர். மேலப் பாளையத்திலும் பல கொலைகளை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை உண்டாக்க நினைத்தனர். தற்போது விநாயக சதுர்த்தி வேறு வருகிறது. பல முஸ்லிம் ஊர்களில் ராமகோபாலன் ஆசியோடு பிரச்னைக்கு தயாராகி வருகின்றனர். இவ்வளவு முயற்சி செய்தும் இதுவரை இந்த இந்துத்வ வாதிகளால் தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ண முடியவில்லை. ஏன்? ஏனெனில் இங்கு காலா காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மதத்தின் பெரும்பான்மை மக்கள் இந்துத்துவ வாதிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றனர். இந்துத்வாவாதிகள் செய்து வரும் புரட்டுக்களையும் நன்கு அறிந்தே உள்ளனர். இருந்தாலும் முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமுடன் இந்துத்வாவாதிகளை அணுக வேண்டும். இவர்கள் செய்யும் சதி வேலைகளை ஆதாரத்தோடு இந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மண் என்றுமே மத மோதல்களுக்கு இடமளிக்காது என்பதை இந்த இந்துத்வா வாதிகளுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் புரிய வைக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக