கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது!


கா. அஹ்மத் அலீ பாகவி 
[ ‘முஸ்லிம் குடி மக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தடைசெய்து விடுகிறான்.’ (நூல்: புகாரி) இந்த நபிமொழி, பதவியாளர்களுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகும்.

கோர்ட்டு, வழக்கு என்று வக்ஃபுச் சொத்துக்களை வீணடிக்கின்ற பொறுப்பாளர்கள், மு(த்)தவல்லி பொறுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மார்க்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற, பொதுப்பணத்தை சூறையாடி வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிற ஜமாஅத் நிர்வாகிகள் மேற்படி நபிமொழியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.]


முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் அந்த ஊர் என்றைக்கும் இல்லாமல் பரபரப்புடன் காணப்பட்டது. விசாரித்தபோது ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு ஓரிரு நாளில் நடைபெறப்போவதாக சொன்னார்கள். இரு கோஷ்டி தலைவர்கள் களம் காண்கின்றனர். அதனால்தான் இவ்வளவு பரபரப்பு என்றனர். தேர்தல் முடிந்து விட்டதா? என்று சிலநாட்கள் கழித்து விசாரித்தபோது போட்டி கடுமையாகி கலவரச்சூழல் ஏற்பட்டு குழப்பம் நிலவியதால் நிர்வாகம் செலற்றுப்போனதாக ஊர் மக்கள் கவலைப்பட்டனர்.

நம்மில் பலர் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பதவியைப் பிடிப்பதற்காக மேற்கொள்கிற சிரமத்தில் ஒருபங்குகூட அந்தப் பொறுப்பை நிர்வகிப்பதில் செலவிடுவதில்லை. உலகிற்கே தீர்ப்பளிக்க வேண்டிய இந்த நடுநிலை சமுதாயத்தின் பதவிப் பிரச்சனைகளுக்கு காவல் நிலையமம் நீதி மன்றமும் தான் தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

இன்று நம் இஸ்லாமிய சமூகத்தில் பொறுப்புகளுக்காக நடைபெறுகின்ற அடிதடிக் கலாட்டாக்கள் மற்றும் அத்துமீறல்கள் வர்ணிக்க முடியாதவை. பொறுப்புகளும், பதவிகளும் தம் கவுரவத்திற்கான அடையாளம் என்றே பலரும் எண்ணுகின்றனர். எனவேதான் எப்பாடுபட்டாவது பதவியைக் கைப்பற்ற முயல்கின்றனர். மார்க்கம் அறிந்த மேதைகள், வணக்கம் புரியும் மெய் விசுவாசிகள் எவரும் இதில் விதிவிலக்கல்ல.

ஆனால் பதவி என்பது பலரும் எண்ணுவதைப் போல சுகமல்ல. அது ஒரு சுமை. தலையில் சுமத்தப்பட்ட பெரும் பாரம். தலைக்கு மேல் தொங்கும் கத்தி. பதவி குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மனசாட்சியுள்ள எவரையும் உலுக்கி விடும்.

நபித்தோழர் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று பதவி கேட்டு விண்ணப்பித்தபோது, ‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். ஆனால் பதவியோ நம்பிக்கையான நிறைவேற்றப்படத் தகுந்த ஒரு பொறுப்பு. அதற்கு நீர் சக்தி பெற மாட்டீர். சரியாக நிறைவேற்றியவரைத்தவிர மற்றவருக்கு அப்பொறுப்பு பெரும் இழிவாகவும் துக்கமாகவும் மாறிவிடும்’ என்றார்கள். (நூல்: புகாரி)

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றொரு மொழி, பதவி வெறியர்களின் நெஞ்சில் நெருப்பாய் விழுகின்றது.

‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப் படுகிறீர்கள். ஆனால் மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை தரும் இன்பங்களிலேயே பதவிப்பால் தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவிப் பாலை நிறுத்துவது தான் மோசமானது. (நூல்: புகாரி)

பதவி ஆசை கொடூரமானது. ருசி கண்டவர்களை அது விடாது. பதவிக்காக முயற்சிப்பவர்களை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதரித்ததில்லை. ஒருவரது உள்ளத்தில் பதவி மோகம் வந்து விட்டால் அந்தப் பதவிக்காக அவர் எதையும் செய்வார். தேவைப்படின் நீதி நியாயத்தைக் கூடப் புறக்கணித்துவிடுவார். எனவேதான் வலிய வந்து பதவி கேட்டவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருப்பியனுப்பினார்கள்.

பதவி கிடைக்கும் வரை பலர் தேனீயை விடச் சுறுசுறுப்பாக இருக்கின்றார்கள். பதவி கிடைத்த பின்னரோ அந்த நாற்காலியைப் போலவே விரைத்துப் போகிறார்கள். ஒரு சிறிய பதவிக்காக பலவகையிலும் முயற்சித்து, செய்யாத காரியத்தயெல்லாம் செய்து, பின் பதவிக்கு வந்த உடன் கடமையை மறந்துவிடுகிற போலிகளுக்கு பஞ்சமே இல்லை. தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள எத்தகைய மோசமான விளையாட்டுகளையும் செய்துவிடுகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தை எவருக்கேனும் அல்லாஹ் வழங்கி அவர் குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவில்லையெனில் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அவரால் நுகர முடியாது என்றும், ஆட்சியாளர்களில் மிகவும் கெட்டவர்கள் மக்களிடம் இரக்கமின்றி நடந்துகொள்ளும் கொடுங்கோலர்கள் ஆவார்கள் என்றும், மக்களை சிரமப்படுத்துகின்ற ஆட்சியாளர்களை அல்லாஹ் மறுமையில் சிரமப்படுத்துவான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) என்றும், குடிமக்களின் நலனைப் பேணத் தவறிய பெயர் தாங்கித் தலைவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அரசியல்வாதிகளுக்கு நாங்களும் சலைத்தவர்களல்ல என்ற நிலையில் தான் இன்றைய இஸ்லாமியத் தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர். சமுதாயம்பற்றி வாய்க்கிழிய பேசும் அவர்கள் தங்கள் சமுதாயம் பாதிக்கப்படுகின்ற போது அதனைக் கண்டும் காணாது இருந்து விடுகிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘முஸ்லிம்களின் காரியங்களில் ஏதாவதொன்றுக்கு அல்லாஹ் ஒருவரைப் பொறுப்பாக்கி வைத்து (அதிகாரத்தை வழங்கி) முஸ்லிம்களின் தேவை மற்றும் கஷ்ட வேளைகளில், வறுமைச் சூழலில் அவர் மறைந்து (ஒளிந்து) கொள்வாரானால் மறுமை நாளில் அவருடைய தேவை, கஷ்டம், வறுமையின்போது அல்லாஹ் அவரை விட்டும் மறைந்து கொள்வான். (நூல்: அபூதாவூது)

‘முஸ்லிம் குடி மக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தடைசெய்து விடுகிறான்.’ (நூல்: புகாரி) இந்த நபிமொழி பதவியாளர்களுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகும்.

கோர்ட்டு, வழக்கு என்று வக்ஃபுச் சொத்துக்களை வீணடிக்கின்ற பொறுப்பாளர்கள், மு(த்)தவல்லி பொறுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு சரியான இமாமை நியமிக்கக் கூட வக்கற்ற, பள்ளியை இருட்டாக்கி விடுகின்ற, மார்க்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற, பொதுப்பணத்தை சூறையாடி வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிற ஜமாஅத் நிர்வாகிகள் மேற்படி நபிமொழியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.

அப்படியாயின் பதவியே கூடாதா? பதவி வகித்தல் மார்க்கம் தடுத்துள்ள ஒன்றா? என்ற கேள்வி எழலாம். தன் தோழர் ஒருவருக்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அழகிய உபதேசம் இதற்கு விடையளிக்கிறது.

அப்துர் ரஹ்மான் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை நீங்கள் வலியக் கேட்காதீர்கள். ஏனெனில் நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் இறையுதவியின்றி அதோடு நீங்கள் (தனியாக) விடப்படவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்’ என்றார்கள். (நூல்: புகாரி)

பதவியை முறையாகச் செயல்படுத்துபவர்கள் வாழ்த்துக்குறியவர்கள். ஏனெனில், ‘யா அல்லாஹ்! என் சமுதாயத்தினரின் காரியங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு பின்னர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டவரிடம் நீயும் கடுமையாக நடந்துகொள்வாயாக! என் சமூகத்தினரின் காரியங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு மென்மையாக நடந்துகொண்டவரிடம் நீயும் மென்மையாக நடந்துகொள்வாயாக!’ என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆ’ச்செய்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

கிரீடத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், பல கிரீடங்களில் முத்துக்களைவிட முட்களே நிறைந்துள்ளன என்கிற தத்துவம் கவனத்திற்குரியது.

நன்றி-சிந்தனை சரம், மார்ச் 2003
www.nidur.info

0 கருத்துகள்: