உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக, முஸ்லிம்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள்.
முஸ்லிமல்லாதவர்கள் இந்த அற்புத மனிதரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த பகுதி அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்).
தொழுகை முடிந்ததும் நபித்தோழர்கள் கேட்டார்கள்: யா ரசூலுல்லாஹ்! தாங்கள் நீண்ட நேரம் சஜ்தாவில் இருந்திடவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ அல்லது தங்களுக்கு வஹி வரத் தொடங்கி விட்டதோ என்று நாங்கள் நினைத்து விட்டோம் என்றார்கள். நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது பேரன் என் முதுகில் அமர்ந்து விட்டார். அவரது மகிழ்ச்சியைக் கெடுத்து விட நான் விரும்பவில்லை!
நூல்: அன் நசயீ, அஹ்மது, அல் ஹாக்கிம்.
2. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புஹாரி
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
3. "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
4. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புகாரி.
5. நபி(ஸல்) அவர்கள், ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புகாரி
6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.
7. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).
8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.
9. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.
10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.
அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்:முஸ்லிம்.
11. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புகாரி.
12. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.
13. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புகாரி.
14. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.
15. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புகாரி.
16. ஹிந்த் பின்த்து உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புகாரி.
17. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள்.
மக்கள், ‘பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புகாரி.
18. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புகாரி.
19. "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"- நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
20. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)"
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி)
ஆதாரம்: புகாரி.
21. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.
அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம்: புகாரி.
22. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், "நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம்.
23. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி.
24. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஆதாரம்: முஅத்தா.
25. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
ஆதாரம்: புகாரி
26. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஆதாரம்: அபூதாவூத்.
27. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி
28. ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக