- என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே!
- அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் முகத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்!
இப்படியாக பலவித சத்தியங்களை செய்பவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் மட்டும் அல்ல!
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் மறுமையையும் நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களும் தான் இவற்றைச் செய்கின்றனர். வேதனையான விஷயம் என்னவென்றால் படுபயங்கர பாவமான இணை வைக்கும் செயல்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வை மட்டுமே வழிபடும் ஏகத்துவவாதிகளும் ஷைத்தானின் இத்தகைய மாய வலையில் சிக்கி உழல்கின்றனர்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை ஒருவர் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் போலாவார். எனவே தான் தொழுகை, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளிலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு சத்தியங்கள் செய்து பாவங்களில் உழன்று நிற்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, நாம் அனைவரும் நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் சிலவற்றையும் மற்றும் இந்த பாவமான செயல்களிலிருந்து நாம் எவ்வாறு தவிர்ந்துக் கொள்வது என்பதற்கு இறைவன் கூறும் வழிமுறைகளையும் நினைவு கூற விரும்புகிறேன். அல்லாஹ் இந்தக் கட்டுரையை முஃமின்களாகிய நம் அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)
இதன் அடிப்படையில் முதலில் நாம் முஃமின்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அவற்றைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றையும் பார்ப்போம்.
முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!
‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.
சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!
ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.
உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.
இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
உண்மையான வீரன் யார்?
“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.
நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை!
“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.
முஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது!
“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் உறவினரோடு பேசமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். பிறகு நபித்தோழர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை அவருடைய உறவினரோடு பேசுவதற்கு வலியுறுத்தினார்கள். முதலில் தயங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மேற்கூறப்பட்ட நபிமொழி நிளைவுறுத்தப்பட்டதும் கண்கலங்கியவர்களாக தம் உறவினரோடு பேசினார்கள். பின்னர் தாம் தவறான சத்தியம் செய்து அதை முறித்தற்காக 40 அடிமைகளை விடுதலை செய்தார்கள் என்ற நிகழ்ச்சி ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். எனவே நாம் உறவை முறிப்பதாக சத்தியம் செய்வது கூடாது.
மூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்!
‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.
எனவே சகோதர சகோதரிகளே! சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.
பினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -
ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.
பகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா?
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)
எனதருமை சகோதர சகோதரிகளே!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையானது! சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது! இதிலுள்ள அனைத்தும் நாம் உட்பட அழியக் கூடியவைகள் என்றும் மறுமையில் நாமும் நம்மிடம் பிணங்கி நிற்கும் நம்முடைய முஸ்லிம் சகோதர சகோதரிகளும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டு நம்முடைய இச்செயல்களுக்காக கேள்வி கணக்குகள் கேட்கப்படுவோம் என்று உறுதியாக நாம் நம்புவோமேயானால் நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் நமக்கு செய்த, செய்து கொண்டிருக்கின்ற தீமைகள் அனைத்தும் ஒரு சல்லிக்காசுக்கு பெறாத சிறிய செயல்களாகவே நமக்குத் தோன்றும்.
மேலும் நாம் இறைவனின் மேற்கூறப்பட்ட சத்தியத் திருமறையின் கட்டளைக்கு அடிபணிந்து நமக்கு தீங்கு செய்ய முற்படும் அந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்ய முற்படுவதற்கு முயல்வோம். அப்போது இன்ஷா அல்லாஹ் இறைவனின் வாக்குப்படி நமக்கு ஜென்ம பகைவராக விளங்கிய அந்த சகோதர சகோதரிகளும் உற்ற நன்பர்களைப் போல ஆகிவிடுவார்கள். இது எப்படி நடக்கும் என்ற சந்தேகம் நமக்கு சிறிதும் வரக் கூடாது. எனெனில்,
- நேற்று வரை ஒன்றோடென்று அடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நகையும் சதையுமாக ஆகிவிட்டார்களே!
- அவர்களா இவர்கள்? நேற்று வரை எலியும் பூனையுமாக இருந்தார்களே!
இப்படி பலவாறாக கடும்பகை கொண்டிருந்தவர்களும் ஒன்றினைந்த நிகழ்ச்சிகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் காண்கிறோம். ஏனென்றால் உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய நம்மைப் படைத்த அல்லாஹ் நாடிவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் நம்பிக்கையுடன் நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய முற்படுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் நாம் பகைவர்களாகக் கருதுபவர்களும் நம்முடைய உற்ற நன்பர்களாகி விடுவார்கள்.
http://mypeaceethics.blogspot.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக