கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குடி கெடுக்கும் குடியரசுகள்

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……
இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள்.
 மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,
“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219
மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கிவிலலாம் உயிருக்கு ஆபத்து.ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.
உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol
  இறுதி உம்மத்திற்க்கு ஏன் இந்தத்தடை?
மனிதனுக்கு பெருமளவில் தீங்கிழைக்கும் மதுவை அல்லாஹ் ஏன் முன்பே தடை செய்யவில்லை? எல்லா நபிமார்கள் காலத்திலும் அனுமதிக்கப்பட்டதா? இல்லையா என்று நமக்குத் தெரியாது. ஒரு உம்மத்திற்கு தடை செய்த ஒன்றை மற்றொரு உம்மத்திக்கு அல்லாஹ் அனுமதிக்கலாம். உதாரணமாக யுதர்களுக்கு கொழுப்பு உண்பது ஹராம், ஆனால் நமக்கு ஹலால். இதுபோல்,பைபிள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் பலர் மது அருந்தியதாக செய்திகள் உள்ளன. இதை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.மற்றபடி,.ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் அனுமதித்த அல்லது தடை செய்த ஒன்றை ஏன்? எதற்க்கு என்று எவரும் அவனை கேள்வி கேட்கமுடியாது. கேள்வி கேட்க தகுதி உள்ளவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
” அவன் செய்பவைகளைப்பற்றி எவருமே அவனைக்கேட்க முடியாது.எனினும் அவனோ, யாவரையும் கேட்கக்கூடியவன்.’ அல்குர் ஆன்-21:23
ஒரு பொருளை உருவாக்கியவனுக்கே அதன் நுட்பங்கள் அனைத்தும் தெரிந்து அதை எப்படி, எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு ஞானம உள்ளது. அதன் உண்மைக ்காரணம் மனிதனின் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. இருப்பினும் அல்குரான் அல் ஹதீஸ் ஒளியில் ஒரு சில உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். இன்றைய உம்மத்திற்கு சராசரி வாழ்வு 60-70 வருடங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
மிக குறைந்த வருடம் வாழும் நமக்கு மதுவினால் வரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம் பாதிப்பை ஏற்ப்படுத்தும். அதே சமயம் முன்பு வாழ்ந்த நபிமார்கள் உம்மத்திற்கு நீண்ட வாழ்வு கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, நூஹ்(அலை) அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்து அவர் மக்களுக்கு போதனை செய்தார்கள். இப்படி நீண்ட வாழ்வு கொடுக்கப்பட்ட மக்களுக்கு மதுவின் தீமை சிறிது, நன்மை அதிகம். மேலும் முன் வாழ்ந்த மக்கள் நம்மை விட பலசாலிகளாக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்-30:9,40:21 ) மேலும் அன்றைய மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள்.எந்த ஒரு சுற்றுச்சூழல் கேடும், மாசும், இரசாயன கழிவுகளும் தோன்றாத காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு மதுவின் தீமை பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை.
ஆனால் இன்று ” மனிதன் செய்த தீவினையின் காரணமாக கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றிவிட்டன. “( Global Warming,Atomic polution ) அல் குர் ஆன்-30:41. என்று அல்லாஹ் கூறுவது போல இன்று நிலம் நீர் காற்று ஆகாயம் அனைத்தும் ரசாயன விஷமாக, வாழ்வாதாரங்கள் மாறிய சூழலில் வாழும் நமக்கு,மதுவினால் ஏற்படும் தீங்கு மிகக்கடும் பதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவான உண்மை.எனினும் உண்மைக்காரணம் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
போதை தரக்கூடிய பொருள்கள் உலகில் ஏராளம் உண்டு.அவைகள் திட, திரவ, வாயு எனும் மூன்று நிலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் அதிகம் போதை தரக்குடியது ,சமுதாயத்திற்கு பெரிதும் தீங்கிழைப்பது என்று அரசாங்கங்கள் கருதுவது திட வடிவில் உள்ள ஹெரோயின், கோகைன் ,ஹஷிஸ் ,கஞ்சா,அபின் போன்றவைகளைத்தான்.பெரும்பாலான நாடுகள் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றன. ” டாஸ்மாக் ” சாராய பாட்டிலை வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்தாலும்,அரசுக்கு கவலையில்லை ஏனேனில் அவை சட்டபூர்வமான போதை.ஆனால் அதே சமயம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தால் 10 வருட சிறை தண்டனை அத்துடன் குண்டர் சட்டமெல்லாம் பாயும்.
ஏனென்றால் அரசின் செல்லப்பிள்ளையாக,வருவாய் ஈட்டித்தரும் மூத்த (குடி) மகனாக மதுவை அரவணைத்து,ஆசீர்வதித்து பட்டி தொட்டிதோரும்,கவர்மென்ட் சரக்கை ஆறாக ஓடவிட்டு கஜானாவை நிறைக்கின்றனர். உலகில் நல்ல(குடி)மகனை உருவாக்க ஒவ்வொரு நாடும் பாடுபடுகின்றன. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளின் அரசாங்க கப்பல் மிதப்பது” தண்ணீ” வருவாயில்தான். மது குடிப்பதை எல்லா குடியரசுகளும் சட்டபூர்வமாக்கி மக்களின் நல்வாழ்வை சீரழிக்கின்றன.இவர்கள் பார்வையில், மதுவை விட போதை மருந்துகள் பெரும் தீமையாகத்தெரிகிறது.இவைகளை தடுக்க கடும் சட்டம். ஆனால் பிராந்தி, விஸ்கி,ரம், ஜின், ஒயின் சாராயம் போன்றவை சமுதாய அங்கீகரிக்கப்பட்ட (Social Drinks) பானமாக ஆராதிக்கப்படுகிறது..
போதை வருவாயில் தள்ளாடும் தமிழ்நாடு அரசு
இன்றைய குடியரசு ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் மது போதை தாராளமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கு தனித் துறை ஏற்படுத்தி சேவை செய்கிறது. “TASMAC” (Tamil Nadu State Marketing Corporation) தமிழ்நாடு முழுவதும் சுமார் 6500 சில்லறை கடைகள் 36000 ஊழியர்கள் 41 சேமிப்பு கிடங்குகள் மூலம் தமிழ் மக்களின் தாகங்களை தீர்க்கிறார்கள். தெருக்குழாயில் தண்ணீர் வருவது நிச்சயமில்லை என்றாலும் ‘டாஸ்மாக்கில்” தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.
1983 ல் டாஸ்மாக்கின் வருமானம் வெறும் 183 கோடி ரூபாய் மட்டுமே, ஆனால் இன்று ( 2009-2010 ) சுமார் 12490 கோடி ரூபாய். தமிழக அரசின் மொத்த வருவாயில் பாதி வருவாய் போதை வருவாய்தான். இந்த வருமானம் ஆண்டுதோறும் சுமார் 20% அதிகரிப்பதாக அறிவிக்கிறார்கள். இதன் பொருள் 20% இளைஞர்கள் போதைக்குள் நுழைகிறார்கள் என்பது மறைமுக உண்மை. கடந்த அக்டோபர் மாத தீபாவளி பண்டிகை இரண்டு நாளில் மட்டும் சரக்கு விற்பனை 160 கோடியாம். இது சாதனையா அல்லது வேதனையா?
மேலைநாடுகளில் கிருஸ்துவ மதத்தின் பெயரால் ஆன்,பெண்,சிறுவர்,சிறுமி என குடும்பமே குடியில் மூழ்கியுள்ளனர். ” என் மாம்சத்தை புசித்து,என் இரத்தத்தை பானம்பன்னுகிறவனுக்கு நித்தியா ஜீவன் உண்டு.”-யோவான் –6:54 என்று இலக்கிய உவமான உவமேயத்தொடு தன்னை இரத்தமும் தசையுமாய் பின்பற்றும்படி இயேசு கூறியதை தவறாக விளங்கி “அப்பம் என் உடல் ஒயின் என் இரத்தம்” என்று மதுவை சுவைக்கின்றனர். மதுவிற்கு எதிராக ஏராளமான பைபிள் வசனங்கள் உள்ளதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. (எபேசியர் -5:18, லேவி-10:9, பழமொழி-20:1,23:20,23:30, லூக்கா-1:15, ரோமன்-13:13), ” வேசித்தனமும் திராட்சை ரசமும் மது பானமும் இருதயத்தை மயக்கும் “-ஓசியா-5:11. இந்தியாவிலேயே அதிக மது விற்பனை எங்கு தெரியுமா? கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியில்தான். ஊர் பெயரைக்காப்பற்ற மக்கள் சாலக்குடிக்கிறார்கள். ஆம்! நன்றாக குடிக்கிறார்கள்
ஆனாலும் மது விற்பனை மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம். தள்ளாடித்திரியும் தமிழர்கள் இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆம்! இந்தியாவிலேயே அதிகமானோர் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். கடந்த ஆண்டு மட்டும் 16561 நபர்கள். அதாவது ஒவ்வொருமணி நேரத்திற்கும் 15 பேர்கள் இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே.
“அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவு” இதுவே அரசின் கொள்கை. கல்லூரி மாணவர்களுக்கு அரசு கூறும் புதிய ஆத்திசூடி –ஊக்க”மது”கைவிடேல். எனவேதான் தேர்வில் பாஸ்மார்க் கிடைக்கா விட்டாலும் “டாஸ்மாக்’ கிடைக்கிறது என்று ஆறுதல் அடைகிறார்கள்.
ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை
மதுபானங்கள் மூலம் மக்களை சுரண்டி ஆதாயம் அடைந்த ஆளும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி தந்த ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு பிரிட்டனில் வெளியாகி பாராளுமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. போதை மருந்துகள் குறித்து ஆய்வு நடத்திய Independent scientific committee on drugs.(ISCD) மற்றும் European Monitoring Centre for Drugs and Drug Addition.(EMCDDA) பிரிட்டனின் ஐரோப்பிய ஆய்வு மையம் பேராசிரியர்.டேவிட் நட் தலைமையில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான “Lancet Medical Journal”லிலும் வெளியாகி மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.
காரணம் என்னவென்றால், இதுநாள்வரை அனைத்து நாடுகளும் பிராந்தி,விஸ்கி,ஒயின் போன்ற மது வகைகளால் மக்களுக்கு பெரிய அளவில் தீமை இல்லை என்று அவைகளை சட்டபூர்வமாக விற்று குடிமக்களை போதையில் தள்ளினர்.அதேசமயம் ஹெரோஇன் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதை மருந்துகள் பயங்கர ஆபத்தானவை என்று கூறி ஜெயிலில் தள்ளினர்.
பேரா.டேவிட் நட் அவர்களின் ஆய்வு, இக்கருத்துக்களை தலைகீழாக புரட்டிப்போட்டது. ஆய்வுக்குழுவினர் ஒரு புதிய அளவு கோலை கையாண்டனர். மதுபானம் குடிப்பதினால்,குடிப்பவர்க்கு ஏற்படும் தீமைகளை ஒன்பது வகையாகவும், மது குடிப்பதினால் மற்றவர்களுக்கு சமூகத்திற்கு ஏற்ப்படும் தீமைகளை ஏழு வகையாகப் பிரித்து, அதில் குற்றச்செயல், வன்முறை, சுற்றுச்சூழல் கேடு,குடும்ப சீர்குலைவு, நாடுகளுக்கு இடையில் ஏற்ப்படும் பாதிப்பு, பொருளாதார இழப்பு என்று வகைப்படுத்தி மதிப்பிட்டனர். இறுதியில் அதிகபட்ச தீமைகளை ஏற்ப்படுத்தும் போதை பொருள்களுக்கு 100 புள்ளிகளும், போதை அறவே இல்லாத பொருள்களுக்கு 0 புள்ளியும் கம்ப்யூட்டரில் கொடுத்து கணக்கிட்டனர்.
இறுதி ஆய்வு முடிவில், அரசுகள் சாதரணமாக கருதும் மது பானங்கள் தான் தனிமனித, சமூகத்திற்கு அதிக ஆபத்தானது என்று முதலிடம் பெற்றது. மதுபானம் 72 புள்ளி, இரண்டாவது இடத்தை 55 புள்ளி, ஹெராயினுக்கும்,54-கிராக்,33-கிறிஸ்டல் மெல்ட்,27-கோகைன், நமது பிரபலமான பீடி சிகரெட்டு, சுருட்டு புகையிலை ஆறாவது இடம் 26 புள்ளி.ஆம்பிடாமைன் .ஸ்பீடு 23, அபின் 20 புள்ளி, வாலியம் மற்றும் கேட்டாமைன் மாத்திரை 15, எல் எஸ் டி 7 புள்ளி .இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் நன்றாகத ்தெரிந்த போதை பொருள்களான எல்எஸ்டி. அபின், வாலியம் இவைகளை விட புகையிலை தீமையில் முன்னிலை வகிப்பதை கவனிக்கவும்.
மது குடிப்பது ஹராம் என்று அல்லாஹ் தடை செய்த பின்னர், இவ்வசனம் (அல்குர் ஆன் -5:90,91) மேலை நாட்டு அறிவு ஜீவிகளால் விமர்சிக்கப்பட்டது. கடும் போதை மருந்துகளான ஹெரோயின், கொக்கோயின், ஹஷிஸ் போன்றவைகளைப்பற்றி எதுவும் கூறாமல், சமுகத்தின் அந்தஸ்துமிக்க பானாமான மதுவை மட்டும் அல்லாஹ் தடை செய்ததேன்? என்று கேள்வி எழுப்பினர். இவர்களுக்குப் பதிலாக நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை முன்வைத்தோம். “போதை தரும் பொருட்கள் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஹராம்.” முஸ்லிம்,அபூதாவூது.
அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்களின் பார்வையில் சாதாரண தீமையாக கருதப்பட்டது மதுபானம்.ஆனால் படைத்த இறைவனுக்கு எதில் தீமை அதிகமிருக்கும் என்பதை அறிந்திருந்ததால்,தனிப்பட்ட போதை மருந்துகளைக் குறிப்பிடாமல், தீமையில் முதன்மைப்பங்கு வகிக்கும் திரவ மதுவை தடை செய்துள்ளான்.
எந்த மேலை நாட்டுமக்கள் மது குடிப்பதால் அதிக தீமை இல்லை என்று கருதினார்களோ, அந்த மக்களில் உள்ள அறிஞர்கள் மூலமாக அல்லாஹ் உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளான். அல்ஹம்துலில்லாஹ் !
“அனைவரையும் படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறியமாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்)வெகு நுட்பமாக அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்.” –அல்குர் ஆன் -67:14.
எஸ்.ஹலரத் அலி –ஜித்தா
இக்கட்டுரைக்கு ஆதாரம்:
1.The Lancet Journal-6Nov.2010.vol.376,issue-9752. NN
2.WWW.thelancet.com/journal/article/pllso140-67363.WWW.bbc.co.uk/news/uk-11660210.
thanks.http://www.readislam.net/portal/archives/3864

0 கருத்துகள்: