ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதீ)
நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்; தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். இதை அவர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புஹாரி(2589)
நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)" என்றார்கள்.
அரிவிப்பாளர் : உமர்(ரலி)
நூல் : புஹாரி(1473)
நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று '(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை" என்றார். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியெனில் அது தன்னுடைய இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது" என்றார்கள்.
அரிவிப்பாளர் : உம்மு அதிய்யா(ரலி)
நூல் : புஹாரி (1494)
பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்" என்றார்கள்.
அரிவிப்பாளர் : அனஸ்(ரலி)
நூல் : புஹாரி (1495).
இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு" என்றார்கள்.
அரிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
நூல் : புஹாரி (2259)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்.
அரிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புஹாரி (2566)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.
அரிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புஹாரி (2568)
அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தம் கையை தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்.
அரிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புஹாரி(2576)
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
அரிவிப்பாளர் : அலீ(ரலி)
நூல் : புஹாரி(2614)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது.
அரிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புஹாரி(2629)
(பனூ) குறைழா, (பனூ) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரையில் (அன்சாரிகளில்) சிலர் நபி(ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காக பேரீச்ச மரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
அரிவிப்பாளர் : அனஸ்(ரலி)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக