கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடம்

 இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.


6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது.

இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதன்படி, தனியார் பள்ளிகள், அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது; எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது; மனரீதியாக துன்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிமுறைகளை உருவாக்கிக்கொள்ள மாநில அரசுகளுக்கு 3 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் வெளியான விவரம்:

தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழைகள் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிந்த பிரிவினர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்), கைவிடப்பட்டோர் (அனாதைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர், அரவாணிகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்) ஆகியோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். அவர்களின் படிப்பு செலவை அரசு ஏற்றுக்கொள்ளும்.

படிப்பு செலவு என்பது அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக்கட்டணம் இதில் எது குறைவான நிதியோ அது நிர்ணயிக்கப்படும். இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக்கணக்கை பராமரிக்க வேண்டும். உரிய தொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தினால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்க கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த ஆஸ்பத்திரியில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். அங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் 6 பேர் மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

கல்வி சார்ந்த பணிகளை விட ஆசிரியர்களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக்கக்கூடாது. உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த குழந்தையையும் துன்புறுத்தக்கூடாது. தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபுரிபவர்கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டிற்குள் அந்த தகுதியை பெற்றால்தான் தொடர்ந்து பணிபுரிய முடியும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.vikatan.com/?nid=4978

0 கருத்துகள்: