கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை!

கும்பகோணம் மகாமகக்குளம், பூம்புகார் துறைமுகம் போன்ற வரலாற்று சின்னங்களும், பழைமையான கோவில்களும் நிறைந்த தொகுதி மயிலாடுதுறை.

இவை தவிர சுதந்திரப்போராட்ட தியாகிகள் எஸ்.ஏ.இப்ராகிம், எம்.பாட்சா, அப்துல்லத்தீப். பாபநாசம் அப்துல் வகாப், ஆக்கூர் ராஜாமுகமது, ஆக்கூர் அப்துல்லா, மயிலாடுதுறை ஏ.எம்.இஸ்மாயில், அப்துல் கரீம் ராவுத்தர், ஆலூர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட ஏராளமான தியாகிகளை நாட்டுக்கு அர்ப்பணித்த தொகுதி இது.

தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி , பூம்புகார், பாபநாசம் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. அதே போன்று, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் முன்னர் இருந்த குத்தாலம் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும் மிக அதிக அளவில் உள்ளனர்.

இங்கு இதுவரை காங்கிரஸ் கட்சி 8 முறைகளும் திமுக இரு முறைகளும் தாமாக இரு முறைகளும் அதிமுக ஒருமுறையும் இரட்டை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.

மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை: 10,96,816

இதுவரை இந்த தொகுதியில் வென்றவர்களின் விவரம்:

1951-இரட்டைஉறுப்பினர்-ஆனந்தநம்பியார்(கம்யூனிஸ்ட்), சந்தானம்(காங்கிரஸ்)
1962 - (தனி) மரகதம் சந்திரசேகர்(காங்கிரஸ்)
1967 - (தனி) சுப்ரவேலு(தி.மு.க)
1971 - (தனி) சுப்ரவேலு(தி.மு.க)
1977 - குடந்தை ராமலிங்கம்(காங்கிரஸ்)
1980 - குடந்தை ராமலிங்கம்(காங்கிரஸ்)
1984 - பக்கீர் முகம்மது(காங்கிரஸ்)
1989 - பக்கீர் முகம்மது(காங்கிரஸ்)
1991 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
1996 - பி.வி. இராஜேந்திரன்(தமிழ் மாநில காங்கிரஸ்)
1998 - கிருஷ்ணமூர்த்தி(தமிழ் மாநில காங்கிரஸ்)
1999 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
2004 - மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்)
2009 - ஓ. எசு. மணியன்(அதிமுக)
2014-................................................................?
கடந்த 15 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

மொத்த வாக்குகள் - 10,96,816
பதிவான வாக்குகள் - 7,99,690
ஓ.எஸ்.மணியன்(அ.தி.மு.க) - 3,64,089
மணிசங்கர் அய்யர்(காங்கிரஸ்) - 3,27,089
ஜி.கே.பாண்டியன்(தே.மு.தி.க) - 44,754
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா(ம.ம.க) - 19,817
எஸ்.கார்த்திகேயன்(பா.ஜ.க) - 7,486
சப்தகிரி(பி.எஸ்.பி) - 5,554
எஸ்.கணேசன்(வள்ளலார் பேரவை) - 4,129
என்.குணசேகரன்(சி.பி.எம்.எல்) - 2,262

இவர்களைத் தவிர எம்.தட்சிணாமூர்த்தி, கே.நாகராஜன், பி.ராஜ்குமார், திமோத்யு, ஜெயராமன், கிருஷ்ணப்பா, வெங்கட்ரமணி, ஜெயக்குமார், பாலாஜி. காளிமுத்து, அப்துல் ஜலில், பிரபுதாசன், அறிவழகன், அகமது மரைக்காயர் ஆகியோர் சுயேட்சைகளாக நின்று தோல்வியுற்றனர்.

அ.தி.மு.க வேட்பாளர் ஓ.எஸ். மணியன், காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யரைவிட 36,854 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் அ.தி.மு.க முதன்முறையாக மயிலாடுதுறை தொகுதியினைக் கைப்பற்றியது.

- வைகை அனிஷ்

0 கருத்துகள்: