கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தொகுதி கண்ணோட்டம் : மயிலாடுதுறை.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன.

தொகுதி சீரமைப்பிற்கு பின் குத்தாலம் தொகுதியில் இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு அருகில் உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. குத்தாலம் தொகுதிக்கு பதில் ஏற்கனவே, தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இருந்த பாபநாசம் சட்டசபை தொகுதி, தற்போது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் 3 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட (தி.மு.க. கூட்டணி) மணிசங்கர் அய்யருக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் கிடைத்தன. ஓ.எஸ்.மணியன் 36 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ.க்கள்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள 6 சட்டசபை தொகுதிகளும் தற்போது எந்தெந்த கட்சிகள் வசம் உள்ளன? அவற்றின் எம்.எல்.ஏ.க்கள் யார்? என்ற விவரம் வருமாறு:–

வாக்காளர்கள் எண்ணிக்கை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 43 ஆயிரத்து 299. இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து 77 ஆயிரத்து 086 பேர். பெண்கள் 6 லட்சத்து 66 ஆயிரத்து 212 பேர். இதர பிரிவினர் 1. கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த பாராளுமன்ற தேர்தலில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 936 பேர் கூடுதலாக வாக்களிக்க உள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதி விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். பட்டு, கைத்தறி நெசவு, பித்தளைப் பாத்திரங்கள் உற்பத்தி, வெண்கலச் சிலைகள் தயாரிப்பு போன்ற தொழில்களும் உள்ளன. மீன் பிடித்தொழிலும் உண்டு. இங்கு வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கின்றனர். நாட்டில், முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் மயிலாடுதுறையும் ஒன்று.

மயிலாடுதுறை தொகுதி, 1962 முதல் 1971 தேர்தல் வரை மாயூரம் என்ற பெயரில் தனி தொகுதியாக இருந்தது. 1977 முதல் பொது தொகுதியானது. பின்பு, பெயரும் ‘மயிலாடுதுறை’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்த தொகுதி, 1962 முதல் 2009–ம் ஆண்டு வரை 13 பொதுத்தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. இதில், 8 முறை காங்கிரசும், 2 முறை த.மா.கா.வும், 2 முறை தி.மு.க.வும், ஒரு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதி எம்.பி. கருத்து

மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை மயிலாடுதுறை–விழுப்புரம் அகல ரெயில் பாதை பணி, விவசாயம், நெசவுத்தொழில் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், மயிலாடுதுறை தொகுதியை தொழிற்பேட்டையாக ஆக்குவேன் என்று வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். இதில் மயிலாடுதுறை–விழுப்புரம் அகல ரெயில் பாதை பணி முடிவடைந்து விட்டது. ஆனால் மயிலாடுதுறை தொழிற்பேட்டையாக மாறவில்லை.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியன் எம்.பி. கூறியதாவது:–

கல்லணையில் இருந்து கடைமடை பகுதியான மகேந்திரபள்ளி வரை கொள்ளிடம் ஆற்றின் இடதுகரையில் கரையை பலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எம்.பி. நிதி, ரோட்டரி சங்கம், சென்னை மருத்துவமனையுடன் இணைந்து 100–க்கும் மேற்பட்டவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க வங்கிக்கடனுதவி செய்து கொடுத்துள்ளேன். கும்பகோணம்– ஜெயங்கொண்டம் அகல ரெயில் பாதை பணி மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட உள்ளது. கும்பகோணத்தில் ரூ.90 லட்சம் செலவில் இருசக்கர வாகனம் செல்லும் வகையில் மேம்பாலம் அமைத்துக்கொடுத்துள்ளேன். நாகை– வேளாங்கண்ணி அகல ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தேன்.

நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்த அவர்கள் வங்கி கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்தேன். பாபநாசத்தில் நிற்காமல் சென்ற ரெயில்களை நின்று செல்ல நடவடிக்கை எடுத்தேன். தற்போது மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பாபநாசத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறேன். எம்.பி. நிதியில் பெரும்பாலும் குடிநீர் தொட்டியுடன் கூடிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மயிலாடுதுறை தொகுதியில் இருந்த மீட்டர்கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். மீனவர் பிரச்சினைக்காக பாராளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் இந்த முறை தொகுதியை தக்க வைக்க அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள். இதே போல் தி.மு.க.வினரும் தற்போது இந்த தொகுதியை கைப்பற்ற தயாராகி வருகிறார்கள்.

சாதிகளை பொறுத்தவரை இங்கு வன்னியர்கள், எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் அதிக அளவில் உள்ளனர். தேர்தலில் முக்கிய பிரச்சினையாக காவிரி நீர் பிரச்சினையும், மீனவர் பிரச்சினையும் எதிரொலிக்கும். மயிலாடுதுறையில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள புதிய பஸ் நிலையத்தை கட்ட வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது. வன்னியர்கள் அதிகமாக இருப்பதால் பா.ம.க.வுக்கும் இந்த தொகுதியில் செல்வாக்கு உள்ளது. பா.ம.க.வும் இங்கு வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணி– தி.மு.க. கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SOURCE:http://www.dailythanthi.com/

0 கருத்துகள்: