கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாம், கிருஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது!

இஸ்லாம், கிருஸ்துவத்திற்கு மதம் மாறும் தலித்துகளுக்கு இந்து தலித்துகளைப் போன்ற சலுகைகளை வழங்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., வாதிட்டார். நாடாளுமன்ற மக்களவை யில் நேற்று (பிப்.21) பகல் 3 மணிக்கு நேரமில்லா நேரத்தில் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-


15 -வது நாடாளுமன்ற மக்களவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய அரசியல் சட்ட சாசனம் மதச்சார்பின்மையை பறைசாற்றுவது. மத அடிப்படை யிலான பராபட்சத்திற்கு இது இடம் அளிக்காதது.

அரசியல் சாசன விதி எண் 341 -ன் அடிப்படையில் சமுகப் பார்வையில் கடைசியில் இருக்க கூடியவர்களான தாழ்த்தப்பட்ட சமூகங்களின் தகுதியை உயர்த்தி காட்டுவதில் இந்திய குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன சட்டப்படி இவர்கள் தலித் என அழைக்கப்படுகின்றனர். இந்த உரிமையை பயன்படுத்தி குடியரசு தலைவருடைய ஆணை 1950 -ல் இந்து மதத்தை பின்பற்றும் தலித்து களுக்கு இட ஒடுக்கீடு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. இதை நான் ஆட்சேபிக்கவில்லை.

ஆனால் அதே தாழ்த்தப் பட்டவர்கள் முஸ்லிம்களாக, கிருஸ்தவர்களாக மதம் மாறி தங்களுடைய சமூக நிலையை மாற்றி சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்க முற்படுகிறபோது தாழ்த்தப்பட்ட சலுகைகள் வழங்கப்படுவது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. சம நீதி பேசும் நாட்டில் ஏன் இந்த பாரபட்ச நிலை?

இந்த தலித்துகள்தான் சமூகத்தில் பொருளாதாரக் கல்வியில் மிகமிக பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு உரிய சமூக நீதி வழங்கப்பட வேண்டாமா? கால ஓட்டத்தில் தலித்துகள்  சீக்கிய பவுத்த மதங்களை தழுவுகிற போது இந்து தலித்துக்களுக்கு வழங்கப் படும் சலுகைகள்   இவர்களுக்கும்   வழங்கப்படும் என 1956 -லும், 1990 -லும் குடியரசு   தலைவர்   ஆணையில்   குறிப்பிட்டிருந்தது  குறிப்பிடதக்கது.

ஆனால் இதே தலித் சமூக மக்கள் முஸ்லிம்களாகவோ, கிருஸ்துவர்களாகவோ தங்களை மாற்றிக் கொள்ளும் போது ஏன் இதே சலுகை வழங்கப்பட வில்லை? இது மக்களிடையே மத வழி பாரபட்சத்தை காட்டக்கூடியது. இந்திய அரசியல் சாசன விதி 14,15,16 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். அதையும் தாண்டி இது இயற்கையான- நீதிக்கு புறம்பான, மனித சமூகத்திற்கு எதிரானதாகவும் அடிப்படை உரிமையை தகர்க்கக்கூடிய தாகவும் அமைந்துள்ளது.

இவர்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்ற போது மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.    ஆனால் இந்த உத்தரவிற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இது வரை பதில்   அளிக்காமல் மத்திய அரசு மவுனம் அளிப்பது ஏன்?

பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மக்களுக்கு சமூக நீதி கிடைத்தே தீர வேண்டும் இதை மத்திய அரசு வழங்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்.

மக்களவையின் கடைசி கூட்டமான நேற்று (பிப்.21) தொல் திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களின் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின எம்.பி.க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்மொழிந்துள்ள எஸ்.சி. எஸ்.டி. மக்களுக்கான உரிமை களை நிலைநாட்டுவதற்கான மசோதாவை நிறைவேற்ற கோரி இருக்கைகளை விட்டு எழுந்து   அவை தலைவர் முன்னிலையில் கோஷமிட்டு கொண்டிருந்தனர்.

எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., உரையாற்ற தொடங்கியதும் அவர்கள் அனைவரும் போராட்டத்தை   கைவிட்டு தம் இருக்கைகளுக்கு திரும்பி எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. யின் பேச்சை ஆதரித்தனர்.

0 கருத்துகள்: