கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..!

நம் ஊரில் தற்போது பல திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் பலர் அவர்களின் திருமணத்தை பதிவு செய்வது இல்லை. காரணம் விழிப்புணர்வு இல்லாமை. சிலர் அதான் பள்ளிவாசல் தப்தரில் பதிவு செய்து விட்டோமே, பிறகு எதற்கு மீண்டும் ஒரு பதிவு என்று வினவுவதும் உண்டு. நாம் திருமணத்தை பதிவு செய்யலாமா..? வேண்டாமா..? என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. நான் என்னுடைய தேவைக்காக திருமணத்தை பதிவு செய்ததின் அனுபவ கட்டுரையே இது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல மாநிலங்கள் கட்டாய திருமண பதிவு சட்டத்தை கொண்டு வந்துள்ளன.

நம் தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது. நம் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.சரி, 

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்தே ஆகனும். அனைத்து மதத்தவர்களும் கண்டிப்பாக பதிவு செய்யனும்.

எங்கே பதிவு செய்வது..?

உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். நமக்கு குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யனும்.

எப்படி பதிவு செய்வது.?

திருமணத்தை பதிவு செய்ய தனியாக விண்ணப்பங்கள் உள்ளன. அதை சார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது எதிரில் உள்ள  பத்திரப்பதிவு கடையில் பெற்றுக்கொள்ளலாம் கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, அவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து கொடுக்கணும்.

மேலும் தேவையானவைகள்.

இருவருக்கும் அடையாள அத்தாட்சி காப்பி கொடுக்கணும் (உதாரணமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வண்டி ஓட்டுனர் அட்டை போன்றவைகள்..)

 கணவருக்கும், மனைவிக்கும் தனித்தனியாக ஒரு சாட்சிகள்.( தந்தை ஆக இருப்பது நலம்).

 இந்த சாட்சிகளுக்கும் அடையாள அத்தாட்சி காப்பி இணைக்கனும்.

 திருமணம் நடந்து முடிந்த பள்ளிவாசலில் இருந்து திருமண சான்றிதல். குறிப்பாக மணமக்கள், ஆலிம் அவர்கள், சாட்சிகள் கையழுத்து போட்ட தப்தர் பக்கம் இருப்பது மிகவும் சிறந்தது. (சில சமயம் இந்த கையழுத்து பக்கம் இல்லை என்றால், பள்ளிவாசலில் கொடுக்கும் திருமண சான்றிதழை நோட்டரி பப்ளிக் அவர்களிடம் அட்டெஸ்ட் வாங்கனும்).

• ஆக, அனைத்து சான்றிதல்களையும் காப்பி எடுத்து, அதை உரிய அரசாங்க அதிகாரியிடம் அட்டெஸ்ட் பண்ணனும். லஞ்சம் வாங்காமல் அட்டெஸ்ட் பண்ணுவது, நம் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள் தான்.

• மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.

• ஆக மொத்தம் அனைத்து படிவங்கள், அட்டெஸ்ட் பண்ணப்பட்ட சான்றிதழ்கள், மணமக்கள், இரு சாட்சிகள் ஆகியவைகள் ரெடி தானே.. வாங்க செல்லுவோம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு.

• அனைத்தையும் சார் பதிவாளர் அவர்களிடம் கொடுத்து விபரம் கூறவும். அவர் அனைத்தையும் அலுவலகம் உள்ளே இருக்கும் அலுவலரிடம் கொடுக்கசொல்லுவார். ரூல்ஸ் அதிகம் பேசினால் அம்புட்டுதான். அலைய விட்டுவிடுவார்கள்.

• அது சரி இல்லை, இது சரியில்லை. இதில் “க்” கன்னா இல்லை, இதில் “கு” னா இல்லை, அட்டெஸ்ட் சரியில்லை, போட்டோ கிளியர் இல்லை, இந்த மையால் எழுதக்கூடாது.. இப்படி பல வழிகளில் நம்மை ஆப்பு அடித்து விடுவார்கள்.

கட்டணம் விபரம் :

o திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய்.

o 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.

o உங்களுக்கு கூடுதல் காப்பி வேண்டும் என்றால், ஒவ்வொரு காப்பிக்கும் பத்து ரூபாய் கூடுதல் கொடுக்கனும்.

o நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை கொண்டு செல்லனும்.

உங்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டு, கையழுத்து, கைநாட்டு வாங்கப்பட்டு விட்டால், முதல் கண்டம் தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம்.
பலர் ஆறு ஏழு முறை படை எடுத்தவர்களும் உண்டு. பலர் ஏன் திருமணம் பண்ணினோம் என்று நொந்தவர்களும் உண்டு. திருமணம் ஈசி ஆக நடந்து விடும், பதிவு செய்வதற்கு தாவு தீர்ந்து விடும்.

இனி, அவர்கள் கூறும் நாளில் சென்று (குறைந்தது ஒரு வாரம்), புரூப் (proof) பார்த்துவிட்டு, தவறுகள் இருந்தால் திருத்தி, அவர்கள் மீண்டும் கூறும் நாளில் சென்று உங்களுடைய கட்டாய திருமண பதிவு சான்றிதழ்களை பெற்று வாருங்கள்.

இன்னும் ஒரு விசயம் உள்ளது.. குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. நோ டென்ஷன்…தண்டனை அதிகம் இல்லை.. தண்டனை 1000 ரூபாய் அபராதம் மட்டுமே.

இந்த பதிவை படித்த அனைவருக்கும் சலாதுடன்…
SMS ஹாஜா. B.Sc.,

0 கருத்துகள்: