இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின்எண்ணிக்கை 2,570ஆக இருந்தது. இது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரை மட்டுமே3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன.
இவ்வாறு இரு மடங்காக, மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேசெல்கிறது. இந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே! நீதிமன்றம்வரை வராமல்சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள், பஞ்சாயத்துகளில், அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும்விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்; லட்சத்தைஎட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
முந்தைய தலைமுறையில் காணப்படாத இந்த அலங்கோலம், இன்றைய இளைய தம்பதியரிடையே பரவக்காரணமென்ன? இத்தனைக்கும் இந்த இளம் தம்பதியர் படித்தவர்கள்; பட்டம் பெற்றவர்கள்; பெரிய பணிகளில்கைநிறைய சம்பாதிப்பவர்கள்; வாழ்க்கை வசதிகளைக் குறைவின்றி அனுபவிப்பவர்கள்; திட்டம்போட்டு இருகுழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்பவர்கள்.
சுருங்கக்கூறின், எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, முறுவல்…என எதுவும் இல்லை. ஆனால், பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தையதலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம் என்ன?
வாழ்க்கைப் பாடம்
படிப்பறிவு இல்லாத, அல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்தது; நிதானம்இருந்தது. எதார்த்த வாழ்க்கை என்ன? குடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள்அறிந்திருந்தார்கள். குடும்பம் சிதறிவிடக் கூடாது; கட்டுக்கோப்பு குலைந்துவிடக் கூடாது என்பதற்காகஉரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்; கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்பள்ளிப் பாடம் இல்லையே தவிர, வாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது.
இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை. சுயநலம்ஒன்றைத் தவிர, குடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றுவதில்லை.எதிலும் அவசரம்! எதையும் உடைத்துவிடும் வறட்டுத் துணிச்சல்! தன் சுகத்தைத் தவிர, எதைப் பற்றியும்யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலை! அவர்களின் ஏட்டுப் படிப்பு, பணம் சம்பாதிக்க உதவுவதைப்போன்று, சம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை.
திருமணம்
முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது,ஒரு வலுவான ஒப்பந்தம்; அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற, நீடித்திருக்க வேண்டிய புனித இணைப்பைஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும். அதை எளிதில் அறுத்தெறியக் கூடாது.
“அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத் திருக்குர்ஆனில்அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியான, மிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள் தம்கணவன்களிடமிருந்து திருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில்அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக்கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமைபெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
ஆக, அல்லாஹ்வை முன்வைத்து செய்தகொள்ளப்பட்ட மண ஒப்பந்தத்தைப் பெரிதும் மதித்து நடக்கவேண்டும்! தகுந்த காரணமின்றி அதை முறித்துப் போட்டுவிடலாகாது. தகுந்த காரணமே இருந்தாலும்கூட,இயன்றவரை முறிக்காமலிருக்க வழியேதேனும் உண்டா என்றே பார்க்க வேண்டும்.
இதனாலேயே, மணஒப்பந்தத்தை முறிக்கும் மணவிலக்கை (தலாக்), அனுமதிக்கப்பட்ட ஹலால்களிலேயேஇறைவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூதாவூத்)
மணமுறிவு ஏன்?
முதலில், மணவிலக்கு என்ற எண்ணம் வந்ததனாலேயே அந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதக் கூடாது.ஏதோ ஒரு மருட்சி; அல்லது அழுத்தம் அந்த எண்ணம் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். அதனால்,அதற்குக் காரணம் என்ன என்று அலச வேண்டும். கணவனாகட்டும்; மனைவியாகட்டும்! மணவிலக்குஎண்ணம் பிறக்கக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்னென்ன என்பதை நிதானமாக அசைபோட்டுப் பார்க்கவேண்டும்.
அதாவது பிரிந்துவிட வேண்டும் என்ற உந்துதல் தம்பதியருக்குப் பிறக்கத் தூண்டுகோலாக அமைந்த அகக்காரணிகள் என்ன? புறக் காரணிகள் என்ன என்று அமைதியாக யோசித்துப்பார்க்க வேண்டும். அக்காரணிகள்ஏன் இவையாக இருக்கக் கூடாது!
தம்பதியரில் ஒருவர் மற்றவரின் உரிமையை மதிப்பதில்லை. இதையே, அவர் தமது கடமையைஉணரவில்லை என்றும் சொல்லலாம்! ஒருவரின் உரிமைதான் மற்றவரின் கடமையாகிறது.
ஒருவர் தமது உரிமைக்கு மேலாக மற்றவரிடம் எதிர்பார்ப்பது, அதாவது மற்றவர்மீதுகடமையில்லாத ஒன்றைக் கடமைபோல் திணிப்பது.
ஒருவருக்கொருவர் தம் உணர்வுகள், ஆசாபாசங்கள், தேவைகள், உடல் உபாதைகள்,மனஅழுத்தம், பற்றாக்குறை ஆகியவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
இதனால்தான், தம்பதியர் மனம் திறந்து பேச வேண்டும்; அவர்களுக்கிடையில் ஒளிவுமறைவுஇருக்கக் கூடாது என்கின்றனர். அதே நேரத்தில், வெளிப்படுத்தும் விதம் காயப்படுத்தாததாக,பக்குவமானதாக இருத்தல் அவசியம்.
ஒருவருக்கு மற்றவர்மேலுள்ள அவநம்பிக்கை, கோபம், சந்தேகம், தவறான எண்ணம்ஆகியவையே பெரும்பாலும் பிரிவுக்குக் காரணிகளாகிவிடுகின்றன. இவற்றைக் களையஇருவருமே முயல்வதில்லை; அல்லது ஒருவர் முயன்றால், மற்றவர் வாய்ப்பளிப்பதில்லை.
“எண்ணங்களில் சில பாவமாகும்” (49:12) என்கிறான் இறைவன்.
“பெரும்பாலும் சந்தேக நோயே மணவிலக்கிற்குக் காரணமாகிறது. ருசி பார்க்கும் ஆண்களையும் ருசிபார்க்கும் பெண்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுஅல்பஸ்ஸார், தப்ரானீ)
அதாவது பாலியல் சுகத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, வேறு துணையை நாடுவோரை அல்லாஹ்விரும்பமாட்டான்.
5. கணவன், மனைவி இருவரில் ஒருவர்மீது குற்றம் குறை இருப்பின் மற்றவர் அதைப்பெருந்தன்மையோடு சகித்துக்கொள்ளாமல், தடாலடியாக எதிர் நடவடிக்கையில் இறங்கிவிடுவது பிரிவுக்குக்காரணமாகிவிடுகிறது. குறையை மறைப்பதிலும் குற்றங்களை மன்னிப்பதிலும் நிறைய நன்மைகள்இருக்கலாம்.
ஒன்றை நீங்கள் வெறுப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் அதில் ஒன்றல்ல; பல நன்மைகள்இருந்துவிடக்கூடும்.
“(இல்லற வாழ்க்கையில்) அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள்வெறுத்தாலும் (பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில்,) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம். (ஆனால்,) அதில் அல்லாஹ் அதிகமான நன்மைகளை வைத்திருக்கலாம்” (4:19) என்று அறிவுரைகூறுகிறது அருள்மறை குர்ஆன்.
அதாவது மனைவியை நீங்கள் வெறுத்தபோதும் அவளை வீட்டிலிருந்து விரட்டிவிடாமல், பொறுமையோடுஅவளுடன் குடும்பம் நடத்துங்கள். அவ்வாறே, கணவன் பிடிக்கவில்லை என்று தாய் வீட்டிற்குஓடிவிடாதீர்கள். பொறுமையோடு அவனுடன் வாழுங்கள். அதனால் இம்மையிலும் மறுமையிலும்உங்களுக்கு அதிகமான நன்மைகள் விளையலாம்.
சேறுபட்டுவிட்ட துணியைச் சற்று காய விட்டுவிட்டால், இலேசாகத் தட்டிவிட்டாலே மண் உதிர்ந்துவிடும்.ஈரத்தோடு உடனுக்குடன் அகற்ற முனைந்தால், சேறு பரவும்; அகற்றுவது கடினம்.
இதனால்தன் நபித்தோழரும் குர்ஆன் அறிஞருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:மனைவியிடம் கணவன் அன்போடு நடந்துகொள்ள வேண்டும். அவள்மூலம் அவனுக்குப் பிறக்கும் குழந்தைவாயிலாக அவனுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. (இப்னுகஸீர்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை கொண்ட ஓர்ஆண் இறைநம்பிக்கை கொண்ட ஒருபெண்ணை அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டாம்! அவளிடமுள்ள ஒரு குணத்தை அவர் வெறுத்தாலும்,மற்றொரு குணத்தால் திருப்தி அடையட்டும்! (முஸ்லிம்)
முன்கோபம் உள்ளவளிடம் கற்பொழுக்கம் இருக்கலாம். கஞ்சனிடம், கெட்ட வழியில் செலவழிக்கும்பழக்கம் இல்லாமலிருக்கலாம்.
அவ்வாறே, மனைவியும் கணவனின் குறைகளை நயமாகச் சுட்டிக்காட்டி திருத்த முயல வேண்டுமே தவிர,எடுத்ததற்கெல்லாம் ‘குலா’ கேட்கும் தவறைச் செய்யக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கடுமையானதோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்: கட்டாயமும் நெருக்கடியும் இல்லாமல்கணவனிடம் எந்தப் பெண் ‘தலாக்’ கோருகிறாளோ அவளுக்குச் சொர்க்கத்தின் வாடைகூடதடுக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)
மேற்சொன்ன காரணிகளை ஆய்வு செய்து, அவற்றைத் தம்பதியரே நிவர்த்தி செய்ய முடியும். மூன்றாவதுஆளின் தலையீடே இல்லாமல் இருவரும் பேசி சுமுக முடிவு காணலாம். மனம் இருப்பின் மார்க்கம் உண்டு.
அப்படியே இருவரால் தீர்க்க முடியாதுபோனால், நடுவர் ஒருவரை அணுகலாம். அவர் நல்ல மனிதராகவும்இருவரின் நலன்மீதும் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இதன்படி, மனைவி தரப்பில்ஒருவரும் கணவன் தரப்பில் ஒருவரும் நடுவர்களாக இருந்து உளப்பூர்வமாக முயன்றால் வெற்றி நிச்சயம்.
“அவ்விருவரும் நல்லிணக்கத்தை நாடினால் அல்லாஹ்வும் அத்தம்பதியருக்கிடையேநல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்” (4:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
மணவிலக்கின் பின்விளைவுகள்
சரி! அப்படியே பிரிந்துவிடுவது எனத் தம்பதியர் இருவரும் மனதளவில் முடிவெடுத்துவிட்டார்கள் எனவைத்துக்கொள்வோம். அப்போதுகூட, சில உண்மைகளை அவர்கள் சீர்தூக்கிப்பார்த்தால், மணவிலக்குஎவ்வளவு கசப்பானது என்பது புரியும்.
மணவிலக்கிற்குப்பின் ஒரு சுமுகமான வாழ்வு அமைவதென்பது சுலபமான காரியமல்ல. வீட்டையோவாகனத்தையோ வேலைபார்க்கும் இடத்தையோ நினைத்தவுடன் மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல,வாழ்க்கைத் துணையை மாற்றுவதென்பது. அதிலுள்ள சுடுகின்ற எதார்த்தங்களை இதோ எண்ணிப்பாருங்கள்!
1. தம்பதியரில் இருவருக்குமோ, அல்லது இருவரில் ஒருவருக்கோ பிரிவுக்குப்பின் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் நேரலாம். மறுமணம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தனிமை,மனிதனைக் குற்றம் செய்யத் தூண்டலாம். கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்ற துணிச்சலே மனிதனைப்படுகுழியில் தள்ளிவிடும்.
அவ்வாறே தனிமை, மனஅழுத்தத்தையும் விரக்தியையும் தரவல்லது. கண்டதையும் சிந்தித்தே உடலையும்உள்ளத்தையும் கெடுத்துக்கொள்ள நேரும். வேண்டாத நட்பையும் தீய பழக்கங்களையும் தனிமை தேடிக்கொடுத்துவிட அதிக வாய்ப்பு உண்டு.
2. இதையெல்லாம்விட, கணவன் – மனைவி இடையிலான பிரிவு குழந்தைகளைப் பாதிப்பதுதான் மிகவும்கொடுமை. தாயின் அன்பு, அல்லது தந்தையின் பரிவு, அல்லது இரண்டுமே கிடைக்காத துர்நிலைக்குஅவர்கள் ஆளாகக்கூடும்.
ஆம்! தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் நெருக்கடியைக் குழந்தைகள் சந்திப்பார்கள்.இரு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்று கேட்பதற்குச் சமம் இது. குழந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறதோஅவர்களின் அரவணைப்பு கிடைக்கலாம்; அந்த அரவணைப்புகூட எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்றுசொல்ல முடியாது. மற்றவரை அவ்வப்போதுதான் பார்க்கவே முடியும்; சில வேளைகளில் பார்ப்பதற்குக்கூடதடை வரலாம்!
பெற்றோரின் பிரிவைச் சரிவர புரிந்துகொள்ளாத குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப் படுவர். அந்த ஏக்கம்வெறியாக மாறி, பெற்றோருக்கெதிராகத் திரும்பினாலும் வியப்பதற் கில்லை. முறையான வளர்ப்பும்இயல்பான அன்பும் கிடைக்காதபோது குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறவும் இடமுண்டு.
3. விவாகரத்து ஏற்பட்டால் பொருளாதாரச் செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. விவாகரத்து வழக்குநீதிமன்றம்வரை செல்லக்கூடும். அப்போது கணவன் – மனைவி இருவர் தலையிலும் நீதிமன்றச் செலவுகள்,வழக்குரைஞர் கட்டணம் முதலான செலவுகள் விழும்.
மனைவியின் ‘இத்தா’ காலத்திற்குக் கணவன் தனியாக ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும். மனைவிக்கும்கணவனுக்கும் சொந்தமான சொத்துகள், உடைமைகள் ஆகியவை கலந்துபோயிருந்தால், அவற்றைத்தனித்தனியாககப் பிரித்து உரியவருக்கு ஒப்படைத்தாக வேண்டும். அதில் இருவருக்குமிடையே பிரச்சினைதோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.
சுமுகமாகவே பிரித்துக்கொண்டாலும், ஒன்றாக இருந்த சொத்து, ஆளுக்கு இவ்வளவு எனப் பிரியும்போதுபலம் குன்றத்தானே செய்யும்! வசதிகள் குறையத்தானே செய்யும்! மணவிலக்கும் பிரிவும்தானே இதற்குக்காரணம்! சேர்ந்து வாழ்ந்தால் இதற்கு இடமில்லையே!
மறுமணத்திற்குப்பின்
பழைய உறவை உதறித்தள்ளியவர்கள், புதிய உறவை நாடிச்சென்று மறுணைம் செய்து கொள்கிறார்கள்என்றே வைத்துக்கொள்ளுங்கள்! புதிய உறவும் மறுமணச் சூழலும் எவ்வாறு அமையும் என்று யாராலும்அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?
புதியவன், அல்லது புதியவள் எப்படி இருப்பாரோ! யார் கண்டது? பழைய துணையை விடப் புதிய துணைமோசமாக இருந்துட்டால்…? எலிக்குப் பயந்து புலிக்கு இரையான கதையாகிவிடும்; அல்லது களை பிடுங்கப்போய் நிலம் பிளந்த கதையாகிவிடும். புதியவர் பழைய வாழ்க்கையைச் சொல்லிக்காட்டி, குத்திக்காயப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைப் போன்றதொரு சித்திரவதை வேறு உண்டா?சொல்லுங்கள்!
அது மட்டுமா? ஊர் வாயை யார் மூடுவது? அவரவர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசித்தீர்ப்பார்களா,இல்லையா? துக்கம் விசாரிப்பதைப் போன்று, கேள்வி கேட்டே பிராணனை வாங்கிவிடுவார்கள்.சொன்னாலும் தொல்லை; சொல்லாவிட்டாலும் தொல்லை. தேவைதானா இந்த அனுபவம்?
குர்ஆன் கூறும் ஒழுங்குமுறை
சரி! பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எல்லையை எட்டிவிட்டது நிலைமை, மணவிலக்குதான்தீர்வு என்ற முடிவுக்கும் வந்தாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, குர்ஆன் கூறும்அழகிய வழிமுறையைப் பின்பற்றுவதை விடுத்து, கண்மூடித்தனமாக ஏன் ‘முத்தலாக்’ சொல்ல வேண்டும்?
அல்லாஹ் காட்டியுள்ள வழியைப் பின்பற்றினால், பிரிந்த உள்ளங்கள் இணைவதற்குக்கூட அதிக வாய்ப்புஉண்டு. அது மட்டுமன்றி, ‘நபிவழி (சுன்னத்) தலாக்’ எனப்படும் முறையைக் கையாண்ட பேறு கிடைக்கும்.முறிவைக்கூட முறையாகச் செய்வதுதானே முறை! அது என்ன ஒழுங்குமுறை என்பதைப் பார்ப்போமா?
அல்லாஹ் கூறுகிறான்: (மனைவியைத் திரும்ப அழைக்க உரிமையுள்ள) ’தலாக்’ இரண்டேதான். பின்னர்முறைப்படி சேர்ந்து வாழலாம்; அல்லது நன்முறையில் (அவளை) விடுவித்துவிடலாம். (2:229)
1. ஒரே மூச்சில் மூன்று தலாக்கைப் பயன்படுத்தாமல், முதலில் ஒரு ‘தலாக்’ மட்டுமே சொல்ல வேண்டும்.
2. அதையும், மாதவிடாய் நாட்கள் முடிந்து மனைவி தூய்மை அடைந்த நிலையிலேயே சொல்ல வேண்டும்.அவ்வாறே, பிரசவ இரத்தப்போக்கு நின்று, மனைவி தூய்மையாக இருக்கும்போதுதான் சொல்ல வேண்டும்.அப்போதுதான், மனைவியின் காத்திருப்புக் காலமான ‘இத்தா’ காலம் நீளாமல் கணக்கோடு முடியும். இப்னுஉமர் (ரலி) அவர்கள் மாதவிடாயிலிருந்த தம் துணைவியாரை மணவிலக்குச் செய்த தகவல் தெரிந்தபோது,திரும்ப மீட்டுக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணை யிட்டார்கள். (புகாரீ)
3. தாம்பத்திய உறவு கொண்ட புதிதில் மனைவியைக் கணவன் மணவிலக்குச் செய்யக் கூடாது. காரணம்,அந்த உறவில் மனைவி கர்ப்பமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும்வரை ‘இத்தா’காலம் நீளும் அபாயம் உண்டு.
4. கர்ப்பிணி மனைவிக்கு தலாக் சொல்லக் கூடாது. ‘இத்தா’ காலம் நீளும் என்பதே இதற்கும் காரணம்.மனஉளைச்சலுடன் கர்ப்பக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இது தாய், சேய்இருவருக்கும் நல்லதல்ல.
5. ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருப்பில் (‘இத்தா’) இருக்க வேண்டும்.அதாவது மறுமணம் செய்யாமல் காததிருக்க வேண்டும். மாதவிடாய் ஏற்படாத பெண்ணாக இருந்தால்மூன்று மாதங்கள் ‘இத்தா’ மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பிரசவமாகும்வரை ‘இத்தா’ இருக்க வேண்டும்.மணமாகி இல்லறச் சுகம் அனுபவிக்காத பெண்ணுக்கு இந்தக் காத்திருப்பு (இத்தா) இல்லை.
‘இத்தா’ காலத்தில் கணவன் இல்லத்தில் மனைவி இருப்பதுதான் முறையாகும். அக்காலத்திற்கான உணவு,உடை உள்ளிட்ட வசதிகளைச் செய்துதருவது – அதாவது ஜீவனாம்சம் வழங்குவது – கணவனின்பொறுப்பாகும்.
‘தலாக்’கின் சரியான நடைமுறை
1. முதல் தலாக் சொல்லப்பட்ட பெண் ‘இத்தா’வில் இருக்கும் காலத்தில் இருவருக்கும் மனமாற்றம்ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரே வீட்டில் இருந்துகொண்டு, இருவரது வாய் பேசாவிட்டாலும் கண் பேசலாம்அல்லவா? ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் மனம் மாறிவிடாதா? இருவரும் மீண்டும் இணையஎண்ணலாம் அல்லவா? அப்படி சேர்ந்து வாழ விரும்பினால் எந்தச் சம்பிரதாயமுமின்றி தாராளமாகச்சேர்த்துகொள்ளலாம்.
இதற்கு ‘மீட்டுக்கொள்ளும் தலாக்’ (ரஐயீ தலாக்) என்று பெயர். ‘இத்தா’ காலமே முடிந்துவிட்டாலும்கவலைப்பட வேண்டியதில்லை. ‘இத்தா’ முடிந்துவிடின், தலாக் ‘பாயின்’ (பிரிவு) ஆகிவிடும். எனவே,இருவரும் திருமண ஒப்பந்தத்தைப் புதிப்பித்துக்கொண்டாலே போதும்; இருவரும் சேர்ந்து வாழலாம்.அல்லது அப்படியே பிரிந்துபோய், மறுமணம் செய்து கொண்டோ தனியாகவோ வாழ்ந்துகொள்ளலாம்.
அவ்வாறு இருவரும் சேர்ந்து வாழும் நாட்களில் இருவரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, சுமுகத்தீர்வுகாண முடியாத அளவுக்கு நிலைமை முற்றி, பிரிவுதான் வழி என்ற முடிவுக்கு வரும்போது கணவன்இரண்டாவது ‘தலாக்’கைப் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டாவது ‘தலாக்’ சொல்லப்பட்ட பிறகும் மனைவி மூன்று மாதவிடாய்க் காலம் ‘இத்தா’மேற்கொள்ள வேண்டும். கணவனின் இல்லத்தில், அவனது பராமரிப்பில் மனைவி ‘இத்தா’ இருந்துவரும்நாட்களில் இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம். ‘இத்தா’ காலம் முடிந்துவிட்டாலும்கூட பிரச்சினைஇல்லை; இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால், திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டுஇணைந்து வாழ முடியும்.
தம்பதியர் முற்றாகப் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக எத்தனை வாய்ப்புகள்! எத்தனை வழிகள்! இருவரும்சேர்ந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதில்தான் இறைவனுக்கு எத்தனை கருணை! இல்லறத்திற்கு நல்வழிகாட்டிய நபிகளாருக்குத்தான் எத்தனை அக்கறை! இந்த சன்மார்க்கத்திற்குத்தான் எத்தனை ஆர்வம்!
இந்த அரிய வாய்ப்புகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தடாலடியாக ஒரே மூச்சில் முத்தலாக்கைப்பயன்படுத்தும் இளைய தம்பதிகளை என்னவென்பது! ஆத்திரப்பட்டு அவசரமாக மூன்று தலாக்கையும் ஒரேதடவையில் கொட்டித் தீர்த்துவிட்டு, பின்பு மனம் திருந்தி சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்று மார்க்கத்தீர்ப்புக் கேட்டு அலைவோரை என்னவென்பது!
இரண்டாவது ‘தலாக்’ சொன்ன பிறகு மீண்டும் சேர்ந்து வாழும்போது தம்பதியருக்கு மத்தியில் பிணக்குஏற்படின், சுமுகமாகத் தீர்வு காணவே முயல வேண்டும். ஏனெனில், சச்சரவு முற்றி, பிரிவதுதான் வழி என்றநிலை ஏற்படின் மூன்றாவது வாய்ப்பைக் கணவன் பயன்படுத்தி, மூன்றாம் தலாக் சொல்லாம். ஆனால்,இதுதான் இறுதியான தலாக். இனி சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம்.
மனைவி மூன்று மாதவிடாய்க் காலம் ‘இத்தா’ மேற்கொள்ள வேண்டும் அதன்பின் வேறொரு ஆணை அவள்மணக்க வேண்டும். புது இல்லறம் கண்ட அவ்விருவருக்கிடையே பிணக்கு ஏற்பட்டு, இயல்பாகமணவிலக்கும் உண்டாகி, அதற்கான ‘இத்தா’ முடிந்த பிறகே பழைய கணவனை அந்த மனைவி மீண்டும்மணந்து, சேர்ந்து வாழ முடியும். இந்தக் கசப்பான அனுபவம் தேவைதானா? இதே நிலைதான், முத்தலாக்கைஒரே நேரத்தில் பாவித்துவிட்டு, மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் தம்பதியரும் சந்திக்க வேண்டியுள்ளது.
இப்போது சொல்லுங்கள்! ‘தலாக்’ சொல்லும் உரிமையைப் படிப்படியாகப் பயன்படுத்தி ஒவ்வொன்றாகச்சொல்கின்ற ‘சுன்னத்தான’ இந்த நடைமுறை சிறந்ததா? அல்லது ஒரேயடியாக ‘முத்தலாக்’ சொல்லும்‘பித்அத்’தான முறை சிறந்ததா?
தலாக் சொன்னபின்பும் சிரமமின்றி மீண்டும் சேர்ந்து வாழ்கின்ற நான்கு வாய்ப்புகளை வழங்கும் ‘நபிவழி’முறை மேலானதா? அல்லது அந்த வாய்ப்புகளுக்கே இடமளிக்காத, ஒரேயடியாகக் கதவை இழுத்து மூடும்‘அநாசார’ முறை மேலானதா?
தம்பதியர் வாழ்வில் பிரச்சினையே ஏற்பட்டாலும் மூன்றாவது ஆளின் தலையீட்டிற்கு வழியே இல்லாத,குர்ஆன் கூறும் நடைமுறை அறிவார்ந்ததா? அல்லது ஊர் வாய்க்கு அவல் போடும் முட்டாள்தனம்அறிவார்ந்ததா?
இளம் தம்பதியரே! நிதானமாக யோசியுங்கள்! பஞ்சாயத்திற்கு இடம்வைக்காதீர்கள்! குற்றவாளிக்கூண்டில் நிற்காதீர்கள்!
source:http://khanbaqavi.blogspot.in/2013/10/blog-post_21.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக