“”குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் மணிவிழா மாநாட்டில் இலட்சோப இலட்சம் லீகர்களின் அணிவகுப்பு மரியாதையை பெருமை பொங்க நெஞ்சு நிமிர்த்தி “”"”சலாம்’’ கூறி ஏற்றுக் கொண்டவர். 25.6.2008- ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்து 5 வருடங்கள் ஆகிறது.
பனாத்வாலா அவர்கள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதி மேமன் முஸ்லிம்கள் குடும்பத்தைச் சார்ந்தவர். 15.8.1933ல் மும்பையில் பிறந்தார். மெத்தப்படித்தவர் ஆசிரியராக தொண்டுகள் ஆற்றி வந்தவர். முழுநேர சமுதாய அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதற்காக ஆசிரியர் பணியை உதறியவர். 1960 ல் மும்பை முஸ்லிம் லீகின் பொதுச்செயலாளர் ஆனார். 1967ல் முதன் முதலாக மராட்டிய மாநில சட்டசபைக்கு முஸ்லிம் லீகின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1972ல் இரண்டாவது முறை சட்டசபை உறுப்பினரானார். தம் 10 வருட சட்டமன்ற பணியில் பல்வேறு விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து அதிசயத்தக்க விதத்தில் வாதங்களை முன்வைத்தார். இவர் பங்கு கொள்ளாத விவாதங்களே இல்லை. என்னும் அளவிற்கு அனைத்து துறைகளுக்கான விவாதங்களிலும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை பாதிக்கும் அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்தவர். மராட்டிய மாநில முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றிய தனிநபர் தீர்மானம், முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தான விவாதம், பசுவதை தடுப்புச்சட்ட விவாதம் – அவுரங்கபாத் மற்றும் நாக்பூர் மதக் கலவரங்களை பற்றிய விவாதம் – வந்தே மாதரம் பாடல் பற்றிய சர்ச்சைக்குள்ளான விவாதம் – குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்தான விவாதம் – கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விவாதம் ஆகியவை வரலாற்றின் பக்கங்களில் என்றும் அவர் புகழ் பாடும் விவாதங்களாகும். இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் தேவை, மக்களின் அடிப்படை தேவைகள் பற்றிய விவாதங்களிலும் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமான தன் விவாதங்களை அழகாக முன்னெடுத்து வைத்தவர்.
இவரின் வாத திறமையும், சமுதாயம் குறித்த பார்வையும், மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமே குடத்திலிட்ட விளக்கு போல் இருந்துவிட கூடாது என்பதற்காக இவரை குன்றின் மேல் ஏற்றிய விளக்காக 1977ல் முஸ்லிம் லீக் இவரை கேரள மாநிலம் பொன்னானி பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து 7 முறை அதே தொகுதியிலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மராட்டிய மாநில சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகளை விட பலமடங்கு அதிகமாக பாராளுமன்றத்தில் ஆற்றினார்.
இந்தியாவிலே பொது சிவில் சட்டம் கொண்டுவர வகை செய்யும் இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவை ரத்து செய்யகோரும் மசோதவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இந்திய தேசத்தின் அடிப்படையான, வேற்றுமையில் ஒற்றுமை, சமயசார்பின்மை, சமய நல்லிணக்கம், ஆகியவற்றின் இலக்கணத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வகுப்பெடுத்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை தன்மையை காப்பாற்ற வாதாடி வென்றார். அஸ்ஸாம் கலவரங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டு மென கர்ஜனை புரிந்தார். பாபரி மஸ்ஜித் தகர்ப்பிலே பங்கு கொண்டு குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட திரு.எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, குமாரி உமாபாரதி ஆகிய மூவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்ககோரி வீரச்சமர் புரிந்தார் – “”"”ராம ஜென்ம பூமி நியாஸ்’’ “”"”விஷ்வ இந்து பரிஷத்”" ஆகிய அமைப்புகளின் மதவாத பாஸிச நடவடிக்கை களை பாராளுமன்ற விவாதங்களில் தோலுரித்துக் காட்டினார். குறிப்பாக ஷாபானு வழக்கின் தீர்ப்பு மூலம் இந்தியாவில் உச்சநீதிமன்றம் ஷரிஅத் சட்டத்தினை கேள்விக்குள்ளாக்கிய போது ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க தனிநபர் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா பாராளுமன்றத்தின் 4 கூட்டத்தொடர்களில் ஏழு அமர்வுகளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் 21 நிமிடங்கள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தனி நபர் மசோதா இவ்வளவு நேரம் விவாதத்திற்குள்ளானது பாராளுமன்ற வரலாறாகும். இந்த விவாதத்தின் போது மத்திய அரசு சார்பில் தாமே இந்த பொருள் குறித்து அரசு அலுவல் மசோதா கொண்டு வருவதாக வாக்களித்து பனாத்வாலா அவர்களின் தனிநபர் மசோதாவை திரும்ப பெற கோரியது. அதன் பின்னர் அன்றைய சட்ட அமைச்சர் திரு. ஏ.கே.சென் அவர்கள் பனாத்வாலா அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் பின் முஸ்லிம் பெண்கள் (மணவிலக்குக்கு பின்னரான உரிமைப் பாதுகாப்பு) மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக்கினார்.
அன்றைக்கு ஷரீஅத் பாதுகாப்புக்காக பனாத்வாலா அவர்கள் பாராளுமன்றத்திலே தனிநபராக வாதாடிய போதும் இந்திய முஸ்லிம்கள் அனைவரின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்ததன் பலனாகவே இன்று வரை இந்த நாட்டில் ஷரீஅத் சட்டத்திற்கான அபாயங்கள் தலைதூக்காமல் காப்பாற்ற முடிந்தது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் அனைவரின் ஒரே பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ஷரீஅத் சட்ட பாதுகாவலர் பனாத்வாலா அவர்களின் ஐந்தாவது நினைவு நாளில் நாம் மீண்டும் ஒரு சோதனையை சந்திக்க தயாராக வேண்டும்.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன் றத்தில் திருமதி.பதர் சயீத் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் என தன் மனுவில் தம்மைப் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் பெண்களை பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை எனவும், பொது சிவில் சட்டம் கொண்டு வர வழிசெய்யும் அரசியல் சாசனம் பிரிவு 44 இருந்தும் பொதுவான சட்டங்கள் சட்டப்பாதுகாப்புகள் இதுவரை முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் குறை கூறுகிறார். முஸ்லிம் மணவிலக்கு குறித்து காஜிகள் வழங்கும் சான்றிதழ்கள் செல்லாது என அறிவிக்க கோரியும். காஜிகளுக்கான அதிகாரமும், தகுதியும் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ஷரீஅத் சட்டங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் உயரிய சிறப்புகளை கொண்டவை. அவற்றின் எல்லைகளை எந்த ஒரு முஸ்லிமும் மீற முடியாது. இந்த சட்டங்கள் முஸ்லிம்களின் மார்க்க கடமை-முஸ்லிமாக இருப்பதன் அடிப்படை நிபந்தனை.
“”"”இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகள். அவற்றை நீங்கள் மீற வேண்டாம். எவர் அல்லாஹ்வின் சட்டவரம்புகளை மீறுகிறார்களோ அத்தகையோர் தான் அநியாயக்காரர்கள் ( 2 : 229 )
“”"”உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக ( இது விதியாக்கப்பட்டுள்ளது) (4 : 24)
இவை திருமணம் மணவிலக்கு குறித்த சட்டங்களை வகுத்துள்ள புனித குர்ஆனின் ஆயத்துக்கள். இவற்றுக்கு மாறாக எந்த முஸ்லிமும் நடக்க முடியாது. அப்படி மார்க்கச் சட்டங்களை மீறி நடப்பவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் எனவும் புனித மறை எச்சரிக்கிறது.
எவர் அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் மறு செய்து அவனுடைய சட்ட வரையறைகளையும் மீறுகிறனோ அவரை நரகத்தில் அவன் புகச்செய்வான் அவர் அதில் நிரந்தமாக இருப்பார் இன்னும் அவருக்கும் இழி தரும் வேதனையும் உண்டு. ( 4 : 14 )
இந்த ஷரிஅத் சட்டங்களை 1937 லேயே இந்திய அரசு (அன்றைய பிரிட்டிஷ் அரசு )ஏற்றுக் கொண்டது. இந்திய முஸ்லிம்களின் வாரிசுரிமை, பெண்களின் சொத்துரிமை, திருமணம், மணவிலக்கு (தலாக், இலா, ஜிகர், லியன்,குலா ) மணக் கொடை,வாழ்க்கை பொருளுதவி, டிரஸ்ட், வக்ப் ஆகிய விவகாரங்களில் ஷரிஅத் சட்டத்தின் படியே முடிவெடுக்கப்பட வேண்டும் என ஷரிஅத் சட்டம் 1937 கூறுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25 மதவழிப்பட்ட நடவடிக்கைகளை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் ஷரிஅத் படி நடப்பது அவனுடைய மார்க்க கடமை மட்டுமல்ல, நம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையும் கூட. இந்த ஷரிஅத் சட்டங்களை மெத்த படித்த அறிஞர்கள் தான் இவற்றுக்கான சரியான விளக்கங்களை கூற முடியும். இந்த நாட்டின் நீதிமன்றங்கள் ஷரிஅத் சட்டத்திற்கான வியாக்கியானங்களை தர முடியாது. மார்க்க அறிஞர்களால் மட்டுமே செய்ய முடிந்த காரியம் அது. இந்த மார்க்க அறிஞர்கள் தான் காஜிகள் என்று அழைக்கப்படு கின்றனர்.
காஜிகள் என்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க சட்ட வல்லுனர்கள். முகலாயர் காலத்திலேயே இந்தியாவில் நாடெங்கிலும் காஜிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு வந்த ஆங்கிலேயர் இந்த காஜிகள் நியமனத்தை தொடர்ந்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க பிரச்சனைகளில் நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலன பணிகளை காஜிகள் செய்து வந்தனர். 1857 ல் நடைபெற்ற “”"”சிப்பாய் கலகம்”" என சிறுமைபடுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் பெரும்பங்கு ஆற்றியது கண்டு பயந்த ஆங்கிலேயர், காஜிகளின் அதிகாரங்களை பறித்தனர். ஆயினும் மார்க்க விஷயங்களில் முஸ்லிம் சமுதாயம் முற்ற முழுக்க காஜிகளின் ஆலோசனைப்படியே நடந்து வந்தது. அதனால் மீண்டும் ஆங்கிலேய அரசு காஜிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு செய்து 1880 ல் காஜிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசாங்கமே காஜிகளை நியமித்தது. இந்த சட்டத்தின் படி காஜிகள் என்பவர்கள் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்ட திருமணங்கள், சடங்குகளில்- நிகழ்வுகளில் முன் நிற்பார்கள் என்பதே. இந்த சட்டம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு திருமணமோ, மணவிலக்கோ, பாகப் பிரிவினையோ, இஸ்லாமிய மார்க்க சட்ட விதிகளின் படி முறையாக நடந்ததா இல்லையா என சான்றுரைக்கும் பணியைத்தான் காஜிகள் செய்கிறார்கள். மார்க்க சட்டங்களின்படி ஒரு மண விலக்கு நடந்தது என மார்க்க அறிஞராக உள்ள காஜிகள் தான் சொல்ல முடியும்-மார்க்க சட்டங்கள் தெரியாதவர் செல்ல முடியாது.
இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கு இந்த மார்க்க அறிஞர்களான காஜிகள் “”"” மணவிலக்கு மார்க்க சட்டப்படியே நடந்தது”" என சான்றுரைப்பதை தடை செய்யக் கோருகிறது. அப்படியானால் யார் சான்றுரைக்க? நீதிமன்றமா? நீதிமன்றம் சான்றுரைக்க வேண்டுமெனில் மார்க்க சட்டங்கள் என்ன என்பதை தொகுத்து நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? இன்றைக்கு இந்துக்கள் சட்டம், கிறிஸ்தவர்கள் சட்டம், பார்சிகள் சட்டம் என தனித்தனியே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி வைத்திருப்பது போலவே முஸ்லிம் தனியார் சட்டங்களையும் தொகுத்து பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாக கொண்டு வரவேண்டும் என்பது தான் இவர்களின் வாதம். இந்த மார்க்க சட்டங்களெல்லாம் மனிதன் இயற்றியது அல்ல. இறைவன் இறக்கி வைத்தவை என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. இந்த அடிப்படை மத நம்பிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில முஸ்லிம் தனியார் சட்டங்களை நிறைவேற்ற சொல்வது, இந்திய அரசியல் சாசன பிரிவு 25ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கே முரணானது. இது பொது சிவில் சட்டத்தை புழக்கடை வழியாக கொண்டு வரும் நரித்தனம். உலகக் கல்வியை மெத்தப் படித்த மேதாவிகள் மார்க்க கல்வியை முறையாக படிக்காததால் ஏற்படும் தள்ளாட்டம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் உயரிய தத்துவம். அதன் அடிப்படையை ஆட்டம் காண வைப்பது பொது சிவில் சட்டம் பற்றிய கோரிக்கை. ஷரிஅத்தை கடை பிடிக்காதவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது. எனவே ஷரிஅத்தை பாதிக்கும் இது போன்ற வழக்குகளை எதிர் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்கிறது.
இந்திய நாட்டிலே எப்போதெல்லாம் அரசாலும், நீதிமன்றங்களாலும், அடிப்படை வாதிகளாலும் முஸ்லிம் சமுதாயத்திற்கும், மார்க்க சட்டங்களுக்கும் ஆபத்துகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு போர்ப்படை வீரனாக முன்னின்று சமர் புரிந்து இச் சமுதாயத்தையும், மார்க்க சட்டங்களையும் காத்து வந்துள்ளது வரலாறு. அதுபோலவே மேற்சொன்ன பொது நல வழக்கிலும் முஸ்லிம் லீக் தன்னை ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு ஷரிஅத் சட்டங்களை பாதுகாக்கும் பணியினை செய்யும். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிபு முதல் முஜாஹிதே மில்லத் குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா வரை நம் தலைவர்கள் காட்டிச் சென்ற களத்திலே நம் யுத்தம் தொடரும். களத்திலிருந்து வீடு சேரும்பேறுநெல்மணிகளுக்கு மட்டுமே- பதர்கள் வீடு சென்று சேருவதில்லை.
- வெ. ஜீவகிரிதரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக