கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இன்று சர்வதேச இரத்த தான தினம்


உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச இரத்த தான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டு பிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலக ரீதியில் இத்தினத்தை அனுஷ்டிப்பதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறிய போதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது அனைவருமறிந்த உண்மை.

‘ஒருவரது இரத்தத்தின் மூலம் புதியதொரு உலகை உருவாக்க முடியும்’ என்பதே இவ்வருடத்தின் கருப்பொருளாகும். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்றாலும் , உலக சுகாதார நிறுவன அறிக்கையின் பிரகாரம் உலக ஜனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்த தானத்தை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்கும் கூடிய அலகுகளை இரத்த தானமாக வழங்கி வருகின்றனர். உலக மக்கள் வழங்கும் ரத்த தானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக ஜனத் தொகையின் 82 வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர்.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிற்றர் இரத்தம் உள்ளது. எனினும் 300 முத‌ல் 350 மில்லிலீற்றர் (ஒரு யுனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்த தானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

இதேவேளை இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், கசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் ரத்த தானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், 2008 ஆம் ஆண்டு 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்கள்

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி ரத்த தானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை ரத்த தானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் ரத்த தானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

ரத்த தானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக ரத்த தான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

எனவே இரத்த தானம் என்பது நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக நமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

நன்றி எல்.ஜெ.ஜீவராஜ்

0 கருத்துகள்: