கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?


திருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம்.. திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும்விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன்-மனைவி உறவுதான் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே!

இன்று எத்தனையோ தம்பதியினரைப் பார்க்கிறோம். பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கணவன் மனைவியின் முழு சம்மதத்துடன் நடந்த திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்திற்கு முன்பே இருவரும் தங்களின் சொந்த விருப்பத்தின்படி முடிவுசெய்து, தாங்களே விரும்பி ஏற்றுக்கொண்ட திருமண வாழ்க்கையாக இருந்தாலும்கூட, 'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதுபோல் வெகு விரைவிலேயே பிரிந்துவிடுமளவு மனக்கசப்பு ஏற்பட்டு தவிப்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு தம்பதிகளுக்கு மத்தியிலும் காரணங்கள் வித்தியாசப்பட்டாலும், குழந்தைகள் பெற்று வாழ்வின் சில கட்டங்களை ஒன்றாக கைக்கோர்த்து தாண்டியவர்கள்கூட, அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையினாலும், உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் சகிப்புத்தன்மை இழந்துவிடுவதாலும், 'நீயா..? நானா..?' என எதிரும் புதிருமாக பிளவுபட்டு, தங்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக்கூட பொருட்படுத்தாமல் பிரிந்துவிட எண்ணும் அவலங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

அதே சமயம், கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவர் அடிப்படையிலேயே மோசமான குணாதிசயங்கள்/நடத்தைகள் கொண்டவராக இருந்து, அதனால் பாதிக்கப்படும் மற்றவர் வாழ்நாள் முழுதும் அதை சகித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் யாருக்கும் கிடையாது. குறிப்பாக இஸ்லாத்தைப் பொருத்தவரை, பாதிக்கப்படுவது ஒரு பெண்ணாக இருந்தாலும் அந்தப் பெண், பிடிக்காத தன் கணவனிடமிருந்து பிரிந்துவிட‌ விவாக விலக்கு செய்யலாம் என பெண்ணுக்கும் விவாகரத்தில் சம உரிமை அளித்துள்ளது. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அதற்குரிய மிகச் சரியான தீர்வைச் சொல்லும் மார்க்கம் இறைவன் வகுத்த இஸ்லாம் மார்க்கம் மட்டுமே!  அதனால்தான் நம் நாட்டு விவாகரத்து சட்டம்கூட இஸ்லாமிய விவாகரத்து சட்டத்தின் பக்கம் முகம் திருப்பி, அதை சரி காணும் நிலைக்கு வந்துள்ளது.

நம் நாட்டின் மிகக் கடினமான "விவாகரத்து சட்டமுறை" தான், கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனைகளில் பல கொடுமைகளும், உயிரழப்புகளும்கூட நடக்க காரணமாக இருக்கிற‌து. தன் வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து வாழ இயலவே இயலாது என்று எப்போது ஒருவர் உறுதியாக நினைக்கிறாரோ அப்போதே, வாழப் பிடிக்காத தன் முடிவைத் தெரியப்படுத்தி பிரிந்துவிட அந்தச் சட்டம் இடமளிப்பதில்லை. இதனால் கோர்ட்டுக்கு சென்று தீர்ப்பை எதிர்ப்பார்க்கும் பெண்கள் பல வருடங்கள் காத்துக் கிடப்பது மட்டுமின்றி, தன் பக்க சாதகமாக தீர்ப்பு வரவேண்டி.. ஏற்கத்தக்க காரணங்களை சொன்னால்தான், தான் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பு கிடைக்கும் என்பதற்காக.. உண்மையிலேயே ஆண்மையுள்ள கணவனாக இருந்தாலும், தனக்குப் பிடிக்காத அந்த கணவன் மீது 'ஆண்மையற்ற‌வன்', 'பொம்பளைப் பொறுக்கி' போன்ற இல்லாத பழிகளைப் போட்டு விவாகரத்தைக் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதனால் பிரிந்து செல்லும் அவளுடைய கணவனும் தன் எதிர்கால வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுவிடுகிறான். அதேபோல் ஒரு ஆணும் தன் மனைவியை பிரிவதற்காக, அவள் ஒழுக்கமானவளாக இருந்தாலும் அவ‌ளை நடத்தைக் கெட்டவளாக சித்தரித்து கோர்ட்டில் முறையிடுகிறான்.

சரியில்லாத தன் கணவனை நினைத்த மாத்திரத்தில் பிரிய இயலாத ஒரு பெண், பெயரளவில் ஒருவனுக்கு மனைவியாக இருந்துக்கொண்டு அவளது உணர்வுகளையும், நிம்மதியையும் சோதிக்க‌க்கூடிய வறண்ட‌ வாழ்க்கையை அனுபவிக்கிறாள். அத்துடன் சட்ட‌ப்படி விவாகரத்துப் பெற்று இன்னொரு திருமணம் செய்ய இயலாத அவளது கணவன் தனக்கு ஏற்படுத்திக் கொண்ட சின்ன வீடு 'செட்டப்'பினையும் சகித்துக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்படுவதன் மூலம் அவள் மனத‌ளவில் பெரும் சித்திரவைதைக்கு ஆளாக்கப்படுகிறாள். இதைவிட கொடுமையாக, பிடிக்காத தன் மனைவியைவிட்டு உடனே பிரிய இயலாத காரணத்தினால் அவளுடைய‌ மரணச் செய்தி 'ஸ்டவ் வெடித்து பெண் சாவு' என தலைப்பிட்டு வரும்படியான ஏற்பாடுகளை கச்சிதமாக முடித்துவிடுகிறார்கள் சில ஆண்கள்! அல்லது மனைவி தன் பக்கம் தவறை வைத்துக் கொண்டே கணவனைப் பிரிய விரும்புபவளாக இருந்தால், அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிய முடியாத‌ சிக்கலான சட்ட சூழ்நிலையினால், அந்த கணவனோடு வாழ முடியாத/விருப்பமில்லாத நிலையில், அந்த மனைவி மூலமே மர்மக் கொலைகளோ அவளுடைய கள்ளக் காதலன் மூலமோ கணவனின் உயிருக்கு ஆபத்தான கட்டங்களை ஏற்படுத்துவ‌தையும் அவ்வப்போது செய்திகளாக பார்க்கத்தான் செய்கிறோம்.

இதற்கெல்லாம் வழிகொடுக்காமல்தான் இஸ்லாம் மார்க்கம் சுலபமான‌ தீர்வாக 'குலஃ'/'குலா' என்று சொல்லக்கூடிய பெண்களுக்கான விவாகரத்து உரிமையை அளித்துள்ளது. இது இந்தியாவின் "முஸ்லிம் தனியார் ‎சட்டம்" (Muslim Personal Law) விலும் குறிப்பிடப்பட்டுள்ள‌து. மோசமான அத்தனை விளைவுகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருப்பது இந்தியாவின் "விவாகரத்து சட்டமுறை" என்பதை வெகு தாமதமாக உணர்ந்த மத்திய அரசு, சென்ற வருடம் 'திருமணச் சட்டத்திருத்த மசோதா' வைக் கொண்டு வந்தது. அந்த புதிய மசோதாவில், பிரிய நினைக்கும் தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவாகரத்து கோரும் தம்பதியர் விவாகரத்து மனுவை சமர்ப்பித்தால், வழக்கப்படி 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை விவாகரத்துப் பெற காத்திருக்கும் நிலமை இருக்காது எனக் கூறப்படுகிறது. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் மனிதனின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு சரியான வழியை அமைத்துக் கொடுத்துள்ளன என்பதற்கு இந்த திருமணச் சட்டத்திருத்தம் சாட்சி சொல்ல‌க்கூடியதாக அமைந்துள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

'அலை எப்போது ஓய்வது.. தலை எப்போது முழுகுவது' என்ற ரீதியில் காத்துக் கிடக்காமல், 'வாழப் பிடிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் சரியானதுதானா? அல்லது காரணமே சொல்லக்கூட விருப்பமில்லையா? நீ பிரிந்துவிடலாம்' என்று முந்திய விவாகத்தை ரத்து செய்து, பிடிக்காத வாழ்விலிருந்து பெண்களையும் விடுதலையடைய வைக்கும் மார்க்கம் இஸ்லாம்! 'கணவன்-மனைவி' என்ற உறவு பிரிக்க முடியாத பந்தமல்ல. எனவே திருமணமான ஒரே மாதமாக இருந்தாலும், ஒரே நாளாக இருந்தாலும், ஏன்... அந்த மறுநிமிடமாகவே இருந்தாலும், அந்த விவாகரத்து உரிமை இஸ்லாமியப் பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சுலபமான இத்தகைய விவாக விலக்குச் சட்டம், இஸ்லாமிய மக்களுக்கு (மார்க்க அறிஞர்களால்) சரியான முறையில் கொண்டுச் செல்லப்படவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.

அத்தகைய‌வர்கள் மார்க்க அறிஞர்களாக அறியப்பட்டாலும் இஸ்லாத்தின் அநேக சட்ட‌ங்க‌ளை அதன் சரியான வடிவில் அறியாததால், விவாகரத்து உரிமையைக்கூட தவறாக விளங்கி, பெண்களுக்கு அவ்வுரிமை இல்லையென மறுத்தனர்; இன்னும்கூட‌ மறுக்கின்றனர். அதை தனக்கு சாதகமாக‌ பயன்படுத்திக் கொண்ட சிலர், தன் மனைவியின் மீது சேர்ந்து வாழமுடியாத வெறுப்பு ஏற்படும்போது, மனைவிக்குதான் விவாகரத்து உரிமை இல்லையே என்ற தவறான எண்ணத்தில், இறுமாப்புடன் தானும் தலாக் விடாமல், 'உன்னை மங்க வைக்கிறேன் பார்!' என்று கூறி, அப்படியே (மனைவியின்) தாய்வீட்டில் அவளை விட்டுச்சென்று, தான் மட்டும் வேறு திருமணம் செய்துக்கொண்டு, பிள்ளைக் குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்வார்கள். கணவன் தலாக் சொன்னால் மட்டுமே பிரிந்துச் செல்லவும், மறுமணம் செய்துக் கொண்டு வாழவும் இயலும் என நினைத்துக் கொள்ளும் அந்தப் பெண்ணும், தன் ஆயுளின் கடைசிவரை வாழா வெட்டியாகவே தனியாக இருக்கும் கொடுமைக்கும், பெண்களின் விவாகரத்து உரிமைப் பற்றிய‌ அவர்களின் அறியாமையே வழிவகுத்தது. இதனால்,

முஸ்லிமல்லாத பலரும், இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இல்லை என்று நினைத்திருந்தார்கள். இஸ்லாத்தை விமர்சிப்பதில் சுகம் காண்பவர்களுக்கும் இந்த விமர்சனம் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. "இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய இயலும்..? அந்த உரிமையை அவர்களுக்கு கொடுக்காமல் 'தலாக்' என்ற ஆணின் உரிமையை மட்டும் கொடுத்து இஸ்லாம் பெண்களின் உரிமையில் பாரபட்சம் காட்டுகிறதே..?" என கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஆனால் இஸ்லாம் 6 வது நூற்றாண்டிலேயே அந்த விவாகரத்து உரிமையை பெண்களுக்கும் அளித்திருந்தது! எனவே நேரடி குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் ஆராயாமல் தீர்வு சொல்லும் சில ஹஜ்ரத்மார்கள்/ஆலிம்கள் சொல்வதையோ, அவர்கள் அங்கீகரிக்கும் மார்க்கத்திற்கு முரணான‌ மத்ஹப்களின் அடிப்படையையோ மார்க்கமாக கொள்ளாமல், மார்க்கத்தின் மூல ஆதாரமாகிய‌ குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே தீர்வு காண்போமானால், அனைத்திற்கும் மிக சுலபமான தீர்வு நமக்கு கிடைக்கும். ஆக, திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள கணவனுக்கு உரிமை இருப்பது போன்றே மனைவியான ஒரு பெண்ணுக்கும் இஸ்லாத்தில் உரிமை இருக்கிறது என்பதையும், இருவருக்குமிடையே விவாவகரத்துச் செய்யும் முறையில் மட்டுமே வித்தியாசமிருக்கிறதே தவிர உரிமையில் வித்தியாசமில்லை என்பதையும் நாம் தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். இஸ்லாத்தின் விவாகரத்து சட்டங்களை சரியாக புரியாத சில ஜமாஅத்தார்கள், பெண்கள் விவாகரத்து செய்யும் உரிமையினை இன்றளவும்கூட  மறுத்தாலும், சமூகத்தில் அது கண்டிப்பாக களையப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதே தவிர, அது இஸ்லாத்தின் குறையாக ஆகாது. 

அல்லாஹ் தனது திருமறையிலே,  
கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று, மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு" (அல்குர்ஆன் 2:228) 

என்றே கூறுகிறான். இதில் விவாகரத்து உரிமையும் அடங்கும்! நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த‌ வழிமுறைகளும் பெண்களின் 'விவாக‌ம்' மற்றும் 'விவாகரத்து உரிமை'யை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவற்றில், பெண்ணுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள‌ 'விவாக விலக்கு உரிமை' யின் சட்டங்களை சற்று விரிவாக காண்போம்.

1) கணவனிடமிருந்து பிரியவேண்டுமானால், பெண் அவனுடைய‌ சம்மதம் பெறவேண்டுமா?

இஸ்லாத்தை சரியாக புரியாத‌ சில அறிவுஜீவிகள் சொல்வதுபோல், ஒரு பெண் விவாகரத்து செய்ய வேண்டுமானால் அந்த கணவனிடம் அனுமதி கேட்கவேண்டும்.. அவனுடைய முழு சம்மதத்தைப் பெறவேண்டும் என்றெல்லாம் இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களில் அறவே கிடையாது. (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)1
  
2) விவாகரத்தை விரும்பும் பெண்கள் நேரடியாக கணவனிடமே சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிடலாமா?

அவ்வாறு செல்வது கூடாது. இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் சில விதிமுறைகளை விதித்துள்ளது போன்று, பெண்களின் விவாகரத்து விஷயத்திலும் சில விதிமுறைகளை விதித்துள்ளது. தன் கணவனிடமிருந்து விவாகரத்தை விரும்பும் பெண்கள், ஜமாஅத்தாரிடமோ, சமுதாயத் தலைவரிடமோ தன் முடிவைத் தெரிவித்துவிட்டு விவாகரத்து(குலஃ) செய்துவைக்க முறையிடவேண்டும். ஏனெனில் அந்த விவாக விலக்கானது அந்த பெண்ணின் பிற்கால வாழ்க்கைக்கே பாதகமாக அமைந்துவிடாமல், ஜமாஅத்தார்கள் அறிவுரைகள் சொல்லி மீண்டும் அந்த கணவனோடு இணைந்து வாழ அறிவுரை கூற‌லாம். பெரும்பாலான பெண்களின் தன்மை, முதலில் வேகமாக அவசரப்பட்டுவிட்டு பின்னால் வருந்துவதான். இதனால்தான் "பெண் புத்தி பின் புத்தி" என சொன்னார்களோ என்னவோ..! கன்னிப் பெண்களுக்கு கணவன் அமைவதே தாமதாகும் இன்றைய‌ சமுதாய சூழ்நிலையில், விவாகரத்தான பெண்களின் நிலையை நாம் அவசியம் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே குடும்பத்தில் அட்ஜஸ்ட் பண்ணி போகவேண்டிய சின்னஞ்சிறிய விஷயங்களுக்கெல்லாம் பின்விளைவை யோசிக்காமல் பெண்கள் தடாலடியான‌ ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற நன்னோக்கத்திலேயே, அவர்களுக்கு நல்லுபதேசங்கள் செய்தும், பொறுமைக் காத்தால் பலனுண்டு என்பதை புரியவைக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கவே பெண்கள் முதலில் ஜமாஅத்தார்களிடம் தெரிவிக்க சொல்லும் அழகிய வழிமுறையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)2

3) விவாகரத்து செய்துவைக்க தங்களிடம் வந்து முறையிடும் (குலஃ கேட்கும்) பெண்களுக்கு ஜமாஅத்தார்கள் செய்யவேண்டிய கடமை என்ன?
கணவன் ஒரு பெண்ணை தலாக் விடாதவரை அந்த திருமண உறவை ரத்துச் செய்யமுடியாது என்று சில‌ ஜமாஅத் தலைவர்கள் சொல்வது சரியா?

ஒரு பெண் 'குலஃ' கேட்பதற்கான‌ காரணங்கள் தெரிய வருமானால் அதைக் கேட்ட‌றிந்து, அப்பெண் மீண்டும் அவளுடைய கணவனோடு சேர்ந்து வாழ, மென்மையான உபதேசங்களை அவளுக்கு செய்யவேண்டும். சேர்த்து வைக்க இயலாத நியாயமான காரணங்கள் பெண்ணின் பக்கம் இருக்குமேயானால், கண்டிப்பாக அந்தப் பெண்ணின் திருமண வாழ்வை ரத்து செய்து, உடனே அவளைப் பிரிந்து விடுமாறு அவளுடைய‌ கணவனுக்கு கட்டளையிட வேண்டிய கடமையும் ஜமாஅத்தார்கள் மீது இஸ்லாம் விதித்துள்ளது.

அபுஸ்ஸுபைர்(ரலி) அறிவிக்கிறார்கள்: 

அப்துல்லாஹ்வுடைய மகள், ஸாபித் என்பவ‌ருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணுக்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கியிருந்தார். ('குலஃ' வழக்கு வந்தபோது) "உனக்கு அவர் தந்துள்ள தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்கிறாயா?" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம்; அதைவிட அதிகமாகவும் கொடுக்கிறேன்" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், "அதிகமாக வேண்டாம்; அவரது தோட்டத்தை மட்டும் கொடு" என்றார்கள். அப்பெண் சரி என்றதும், ஸாபிதின் சார்பாக நபி(ஸல்) அவர்களே தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபிதுக்குத் தெரிய வந்தபோது, "அல்லாஹ்வின் தூதருடைய தீர்ப்பை நான் ஏற்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதார நூல்: தாரகுத்னீ)

இங்கே கணவனின் தலாக்கை எதிர்ப்பார்க்காம‌ல் நபி(ஸல்) அவர்களே அந்தப் பெண்மணியிடமிருந்து மஹரைப் பெற்றுக் கொண்டு திருமணத்தை ரத்து செய்து நமக்கு வழிகாட்டுகிறார்கள். இந்த தகவல், சம்பந்தப்பட்ட அந்தக் கணவருக்கே பிறகுதான் தெரிய வருகிறது என்றால் ஜமாஅத் தலைவருக்கு உள்ள அந்த உரிமையையும், பெண்ணின் 'குலா'வை மட்டும் ஏற்றுக்கொண்டு அவ்வாறு பிரித்து வைக்கவேண்டிய கடமையையும் அவர்கள் தெளிவாக அறிய வேண்டும். ஆக, கணவன் தலாக் விடாதவரை அந்த திருமண உறவை ரத்துச் செய்யமுடியாது என்று கூறக்கூடிய‌ ஜமாஅத் தலைவர்கள், இந்தக் கடமையை பெண்கள் தரப்பில் சரியாக செய்துக் கொடுக்காவிட்டால் அல்லாஹ்விடத்தில் இஸ்லாத்தின் சட்டத்தைப் புறக்கணித்த குற்றவாளிகளே! (இன்று குர்ஆன்‍-ஹதீஸின் அடிப்படையில் மட்டுமே பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் சில‌ 'ஷரீஅத் தீர்ப்பாயங்கள்' தமிழ்நாட்டில் உள்ளன. திருமண வாழ்வில் பாதிக்கப்பட்ட பெண்கள் அவற்றை நாடி தீர்வு கேட்டு, சுலபமாக விவாக விலக்குப் பெறலாம்.) 


4) தன் கணவனைப் பிரிவதற்கான காரணங்களை ஜமாஅத்தார்களிடமோ மற்றவர்களிடமோ ஒரு பெண் சொல்லிதான் ஆகவேண்டுமா?

தேவையில்லை. வெளியில் சொல்ல அவளுக்குப் பிடிக்காத அந்தரங்க காரணங்கள் பல இருக்கலாம். எந்த காரணமும் சொல்ல விரும்பாத‌ பெண்களும் அந்த இல்வாழ்க்கையை தொடர, 'தான் விரும்பவில்லை' என்பதை மட்டும் ஜமாஅத்தார்களிடம் தெரிவித்துக்கூட உடனே விவாக விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற நிறைய சம்பவங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடந்துள்ள‌து. (அடுத்த கேள்விக்கான பதிலில் கூறப்பட்டுள்ள‌ ஹதீஸே இதற்கான போதுமான ஆதாரமாகும். அந்த ஹதீஸிலே 'பரீரா' என்ற பெண்ணின் கோபத்தைப் பார்த்து வியக்கும் நபி(ஸல்) அவர்கள், அதற்கான காரணத்தை அந்தப் பெண்ணிடம் கேட்கவில்லை.)

5)சேர்ந்துதான் வாழவேண்டும்' என அப்பெண்ணை நிர்ப்பந்திக்க ஜமாஅத்தார்களுக்கோ, பெண்ணின் தந்தை அல்லது உறவினர்களுக்கோ இஸ்லாத்தில் உரிமை உள்ளதா?

ஒரு மனைவி மூலமாக‌ அவளுடைய கணவனுக்கு வாழ்க்கையின் என்னென்ன சந்தோஷங்களும், திருப்தியும் கிடைக்கிறதோ அவை அனைத்துமே.. மனைவியாக தன்னுடன் வாழும் ஒரு பெண்ணுக்கும் முழுமையாக கிடைக்கவேண்டும். அப்படியில்லாமல், கணவனால் கிடைக்கவேண்டிய அடிப்படை சந்தோஷங்களின்றி, அவன் செய்யும் அக்கிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டு ஒரு பெண் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை எந்த பெண்ணின் மீதும் ஒரு போதும் இஸ்லாம் திணிக்கவில்லை. 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்ற ஆணாதிக்க சக்திக்கெல்லாம் இஸ்லாத்தில் துளியளவும் இடம் கிடையாது.  

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு, பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்ப்பந்திக்கவில்லை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: 

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு 'முஃகீஸ்' என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் "அப்பாஸ் அவர்களே! பரீராவின் மீது முஃகீஸ் வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?" என்று கேட்டார்கள். (பிறகு முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி(ஸல்) அவர்கள் "முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?" என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் "(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்" என்றார்கள். அப்போது பரீரா, "(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிட்டார்.
ஆதாரம்: புகாரி (5283)

ஆக, அல்லாஹ்வின் தூதர் அவர்கள்கூட‌ 'நான் கட்டளையிடவில்லை; இது என் பரிந்துரையே' என்று கூறிவிட்ட பிறகு, அது நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இல்லாததால் அவர்களின் பரிந்துரையை அந்தப் பெண்மணி மறுத்துவிட்ட இந்த சம்பவம், பெண்ணின் உரிமையில் தலையிட்டு.. பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்ணை நிர்ப்பந்திக்க பெற்ற தாய், தகப்பனுக்குகூட இஸ்லாத்தில் உரிமையில்லை என்பதை பட்டவர்த்தனமாக கூறுகிறது. சுப்ஹானல்லாஹ்! இதுதான் பெண்ணுரிமைப் பேணும் இஸ்லாம்!!

6)   விவாக விலக்கினைப் பெற்ற பெண்கள், கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திருப்பிக் கொடுத்துவிடவேண்டுமா?

ஆம். ஒரு பெண் விவாக விலக்கினை தன்னுடைய தரப்பிலிருந்து கோருவதால், திருமணத்தின்போது கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை ஜமாஅத்தார்கள் மூலமாக அந்தக் கணவனிடம் கட்டாயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். இதற்கும் ஜமாஅத்தார்களே பொறுப்பேற்று, அதை வாங்கி கணவனிடம் கொடுக்கவேண்டும். (இதற்கான‌ ஆதாரம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது)3

7) மஹரைத் தவிர்த்து மற்ற செலவினங்களைக்  காட்டி கூடுதல்  தொகையை  கணவன் கேட்டால், அவற்றையும் பெண் திருப்பிக் கொடுக்கவேண்டுமா?

கொடுத்த மஹரை விட கூடுதலாக பெண்ணிடத்தில் வேறெதையும் கணவன்  கேட்க முடியாது. ஜமாஅத் தலைவரும் அதை வற்புறுத்த முடியாது.

இப்னு மாஜாவில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் 2332 வது ஹதீஸில், "(மஹராகக் கொடுத்த‌)அவரது தோட்டத்தை பெற்றுக் கொள்ளவேண்டும். அதைவிட அதிகமாகப் பெற்றுக் கொள்ளக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ள ஹதீஸ் இது சான்றாக அமைந்துள்ளது.


8) 'குலஃ' சொன்ன‌ பெண்கள் எவ்வளவு காலத்திற்கு 'இத்தா' இருக்கவேண்டும்?

கணவனிடம் 'குலஃ' சொல்லிவிட்ட பெண்கள் ஒரு மாதவிடாய் ஏற்படும் காலம்வரை 'இத்தா' இருக்கவேண்டும். 

ருபய்யிஃ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் 'ஜமீலா' எனும் தம் மனைவியை அடித்தார். அதனால் அவரது கை ஒடிந்துவிட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத் தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸை அழைத்து வரச்செய்து, "அவள் உமக்குத் தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டு விடுவீராக!" என்றார்கள். அவர் "சரி" என்றார். அப்பெண்மணியிடம் "ஒரு மாதவிடாய்க் காலம்வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும், தாய் வீட்டில் சேர்ந்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: நஸயீ (3440)

9) 'குலஃ'வின் மூலம் கணவனைப் பிரிந்த பிறகு, மீண்டும் அந்த கணவனுடன் சேர்ந்து வாழ பெண் விரும்பினால், அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? 
அதற்கு நிபந்தனை எதுவுமுண்டா?

தன் கணவனைப் பிரிந்து வாழ்வதைவிட சேர்ந்து வாழ்வதே மேல் என எப்போது ஒரு பெண் உணர்கிறாளோ, தான் பிரிந்து வந்தது தவறு என்ற முடிவுக்கு வந்து மீண்டும் அந்த கணவனுடன் சேர்ந்து வாழ அவள் விரும்பினால், தன் முன்னாள் கணவனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவனுடைய சம்மதத்தைக் கேட்கவேண்டும். அதற்கு அந்த கணவ‌ன் சம்மதித்து தன் முன்னாள் மனைவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிப்பானேயானால், புதிதாக மஹர் கொடுத்து 'மறுமணம்' செய்துக் கொள்ளும் நிபந்தனையின் மூலம் மட்டுமே சேர்ந்து வாழ இயலும். மறுமணம் செய்யாமல் சேர்ந்து வாழ இயலாது. ஏனெனில் 'குலஃ'வின் மூலமாக என்றைக்கு இருவரும் பிரிந்தார்களோ, அன்றைக்கே இருவரும் அந்நியர்களாகி விடுவார்கள். அந்நிய ஆணும் பெண்ணும் திருமண ஒப்பந்தமின்றி சேர இஸ்லாத்தில் இடமில்லை என்பதே இதற்கு போதுமான ஆதாரமாகும். (பின்வரும் பதிலிலும் கூடுதல் ஆதாரத்தைக் காணலாம்) 

10) 'குலஃ'வுக்கு பிறகு தன் (முன்னாள்) மனைவியை மறுமணம் செய்யாமல் மீண்டும் அழைத்துக்கொள்ள கணவனுக்கு அனுமதி உண்டா?

'தலாக்' செய்த பிறகு மூன்று மாதவிடாய் காலத்துக்குள் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பதைப்போல், 'குலஃ'வுக்கு பிறகு தன் (முன்னாள்) மனைவியை மஹர் கொடுத்து மறுமணம் செய்யாமல் மீண்டும் அழைத்துக்கொள்ள அந்தக் கணவனுக்கு அனுமதியில்லை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறைக்கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்துக்கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்" என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்.) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி "சரி" என்றார். உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் "தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு" என்றார்கள்.நூல்: நஸயீ 3409

'ஒரேயடியாக அவளைப் பிரிந்து விடு' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மீண்டும் அழைக்கும் உரிமை கணவனுக்கு கிடையாது என்பதும், 'குலஃ' அடிப்படையில் பிரிந்தவர்கள் அந்நிய ஆண் பெண்களாகி விடுவர் என்பதும் தெளிவாகிறது. 

1), 2), 6) ஆகிய பதில்களுக்கான ஆதாரம்:-

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்: 

ஸாபித் இப்னு கைஸ் பின் ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைக் கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துக் கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்; (தந்து விடுகிறேன்)" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), "தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!" என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி (5273)

1) இந்த ஹதீஸில் தன் கணவனிடமிருந்து பிரிந்து விடுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்ட அந்தப் பெண்ணிடம், அவர்களின் கணவனுடைய‌ சம்மதத்தைப் பெற்று வந்தாயா என்று கேட்கவோ, சம்மதம் பெற்று வரும்படியோ நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

2) நேரடியாக கணவனிடமே 'குலஃ' சொல்லிவிட்டு பிரிந்து சென்றுவிடாமல், நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்தே முறையிடுகிறார்கள்.

3) திருமணத்தின்போது கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திருப்பிக் கொடுத்துவிடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

ஆகவே... பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழியை உலகில் எங்குமே காண முடியாது! இஸ்லாமிய வாழ்க்கையில் தன் மனைவியைப் பிடிக்கவில்லையெனில் "தலாக்" சொல்லி விவாக உறவினை முறித்துக் கொள்ளும் விதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், கணவன் மீது அதிருப்தியுறும் மனைவியும் "குலஃ" (خلع) எனும் விவாகப் பிரிவினையின் மூலம் கணவனைப் பிரியும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கும் வழங்கியுள்ளது என்பதை நாம் உலக மன்றத்தில் உரத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

பிடிக்காத கணவனுடன் வாழ இயலாமலும், பிரிய வழி தெரியாமலும் வாழா வெட்டிகளாக, பிறந்த வீட்டில் கண்ணீர் வடித்தே காலத்தைத் தள்ளும் அபலைப் பெண்களுக்கு, இஸ்லாம் கொடுத்துள்ள‌ உரிமைகளை அறியத் தரவேண்டும். சில இஸ்லாமியத் தலைவர்களின் அறியாமைக் காரணமாக‌ பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய கொடுமையினால், மாற்றாரும் இஸ்லாத்தை தவறாக விளங்கி விமர்சிக்க இடமளித்து விடக்கூடாது.

வாழ இயலாத கண‌வனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வை அமைத்துக் கொள்ள இஸ்லாம் கூறும் அற்புதமான வழிமுறைகளை அப்பெண்கள் அறிவதற்கு ஏற்பாடு செய்வதும், இத்தகைய இறை மார்க்கத்தின் அழகிய வழிகாட்டுதல்களை கையில் வைத்துக்கொண்டு பெண்களுக்கு விவாகரத்து விஷயத்தில் அநீதி இழைக்கும் ஜமாஅத் தலைவர்களுக்கு இந்தச் சட்டம் பற்றி விளக்குவதும், இவற்றை அறிந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்ள‌வேண்டும்!

உங்கள் சகோதரி,
அஸ்மா ஷர்ஃபுதீன்.
நன்றி:இஸ்லாமியப் பெண்மணி

0 கருத்துகள்: