கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திருப்பனந்தாள் மன்னியாறு அருகே ஆம்னி பஸ் வயலில் கவிழ்ந்தது


திருப்பனந்தாள், அக். 19-சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இதில் 32 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 33) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் மன்னியாறு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அருகில் இருந்த 50 அடி பள்ளத்தில் உருண்டு வயல் வெளியில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. விஜயலெட்சுமி, தஞ்சை, 2. ஆயிஷா பீவி, சென்னை, 3. சுரேஷ்குமார், தாம்பரம், 4. தேவி, 5. பிரியதர்சினி (10), 6. அருணிசெல்லம் (9), இவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். 7. அஸ்வின்குமார், சென்னை, 8. பார்த்திமா, காஞ்சிபுரம், 9. செல்வக்குமார், பஸ் டிரைவர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும். அருகில் உள்ள பட்டம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டம் கிராம மக்கள் உதவியுடன் பஸ் கண்ணாடியை உடைத்து பயணிகளை காப்பாற்றினார்கள். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பனந்தாள் மற்றும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் ஸ்டியரிங் கட் ஆனதால் வயலில் கவிழ்ந்ததாக டிரைவர் செல்வக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருப்பனந்தாள் மன்னியாறு பகுதியில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடந்த 15-ந்தேதி சென்னையில் இருந்து கும்பகோணம் வந்த கார் மன்னியாற்றில் கவிழ்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியிலேயே தற்போது ஆம்னி பஸ் வயலில் கவிழ்ந்து 9 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:மாலைமலர்

0 கருத்துகள்: