கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இடஒதுக்கீடு:தமிழக நகரங்களை அதிரவைத்த முஸ்லிம்களின் போராட்டம்!

Ch - 10சென்னை:இந்திய தேசத்தின் வளர்ச்சி, ஒருமைப்பாடும், சுதந்திரம், கலை, கல்வி, நாகரீகம் என அனைத்து துறைகளிலும் பாரிய பங்களிப்பை அளித்துள்ள மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் இன்று கல்வி, பொருளாதாரம், அரசியல், அதிகார துறைகளிலும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள்.

ஒரு புறம் மத்திய மாநில அரசுகளின் புறக்கணிப்பு, இன்னொரு புறம் பாசிச, மேல்ஜாதி ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி என அலைக்கழிக்கப்படும் முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வில் ஓரளவேனும் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவர்களது மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது இன்றியமையாதது ஆகும்.

இதனையே மத்திய அரசு நியமித்த சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் எடுத்தியம்பின. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க பரிந்துரைத்தது. ஆனால், அரசு அதனை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. வெகு ஜன இயக்கமாக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் இக்கோரிக்கையை கையில் எடுத்து வீரியத்துடன் போராடி வருகிறது.

தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்கான குரல் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பாக எழுப்பப்பட்டு, பல்வேறு போராட்டங்களும் நடந்து வந்தன. இதன் விளைவும் முந்தைய தி.மு.க தலைமையிலான தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால், இது போதுமானதாக இல்லை.

இந்நிலையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வாக்குறிதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக் கோரியும், தேசிய அளவில் நீதிபஹி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள், ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.



சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இருந்து துவங்கிய மாபெரும் கோரிக்கை பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அணிவகுத்து வர ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்லிம்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி தெற்கு கூவம் சாலை வழியாக லாங்ஸ் கார்டன் பாண்டியன் சந்திப்பில் நிறைவடைந்தது.



அங்கு நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் கடலூர் மாவட்ட தலைவர் மெளலவி ஆபிருதீன் மன்பயீ வரவேற்புரையாற்ற, ஏ.கே. முஹம்மது ஹனீஃபா (முஸ்லிம் தொண்டு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுஃப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மேதகு தமிழக ஆளுநர் ஆகியோரிடம் மறுநாள்(இன்று) வழங்க இருக்கின்றது என பாப்புலர் ஃப்ரண்ட்டின் சென்னை மாவட்ட செயலாளர் ஷாஹித் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களான மதுரை, கோவை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓயமாட்டோம் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் நேற்று நடந்த போராட்டம் இடஒதுக்கீட்டிற்கான முஸ்லிம்களின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன‌.

1. முஸ்லிம்கள் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்ததால் தான் சுதந்திரம் பெறும் முன்பே அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்பும் நமது நாட்டின் மக்கள் தொகையில் (2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம் சமூகத்தின் நிலை மேலும் மோசமானதே தவிர எந்தவொரு முன்னேற்றமும் அடையவில்லை. இந்நிலையில் மத்திய அரசு சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை ஒரேடியாக ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே சமூக நீதியின் அடிப்படையில் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தினை முன்னேற்ற முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10% தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளில் உடனடியாக அமுல்படுத்திட வேண்டும்.

2. வகுப்புரிமை ஆணையின் மூலம் 1948-ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் 7% தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. வகுப்புரிமை ஆணையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்த போது தான் முஸ்லிம்களுக்கு தனியாக 7% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 1948-ம் ஆண்டு வகுப்புரிமை ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கிய போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டனர். சச்சார் கமிஷனின் ஆய்வுப்படி இடஒதுக்கீடு, சலுகை கிடைக்கப் பெறாத முன்னேறிய முஸ்லிம்களின் நிலை, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடஒதுக்கீடு அனுபவித்து வரும் ஹிந்து சமூகத்தினரைவிட மோசமானதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். எனவே முஸ்லிம்களால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடன் போட்டி போட இயலாது. 2007ம் ஆண்டில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த 3.5% இடஒதுக்கீடு முஸ்லிம் சமூகத்தை, முன்னேற்றிட நிச்சயமாக போதுமானது கிடையாது. பிற சமூகங்களுக்கு விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கிய போது 5.6% மக்கட்தொகையுடைய முஸ்லிம்களுக்கு வெறுமனே 3.5% இடஒதுக்கீடு வழங்கியது பாரபட்சமாகும். எனவே சமூக நீதியின் அடைப்படையிலும் சம நீதியின் அடிப்படையிலும் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதே 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்கிட வேண்டும்.

3. ரோஸ்டர் முறையினால் மீண்டும் முஸ்லிம்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. குறைவான காலியிடங்கள் இருக்கும் பணிகளால் ரோஸ்டரின் சுற்றில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கிடைக்க சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மாவட்ட ரீதியாக காலியிடங்களை நிரப்புவதிலும் முஸ்லிம்கள் மீண்டும் பல ஆண்டுகள், காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் 69% இடஒதுக்கீட்டின்படி எந்தெந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதோ, அந்த சமூகங்களை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக பணியில் அமர்த்தும் போது முன்னுரிமை கொடுக்க வேண்டும். அனைத்து அரசுப் பணிகளிலும் அனைத்து சமூகத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை ரோஸ்டர் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் உரிய பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையில் ரோஸ்டர் முறை குறித்து குறுகிய காலத்திற்குள் நிபுணர் குழு ஆய்வு நடத்தி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும்.

4. உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும். 24.3% மக்கள் தொகையுடைய தலித் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கு விகிதாச்சார இடஒதுக்கீட்டின் படி 22.5% இடஒதுக்கீடு வழங்கும் போது, 52% மக்கள் தொகையுடைய பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை, உச்ச நீதிமன்ற ஆணை தடுப்பது பாரபட்சமாகும். நாட்டில் 84.8% இடஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது மொத்த இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்று உத்தரவிடுவது சமூக நீதிக்கும் சமநீதிக்கும் உகர்ந்தது அல்ல. எனவே உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கான 50% தடையை மறு ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட இயற்றி சமூக நீதிக்கொள்கையை பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும்.

5. வேறு மதங்களலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏற்கனவே அனுபவித்த இடஒதுக்கீடு சலுகைகள் பறிக்கப்படுகிறது. ஒரு மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுவதால் அவரது மத நம்பிக்கைதான் மாறுகிறதே தவிர அவரது கல்வி மற்றும் சமூக சூழ்நிலைகள் மாறுவதில்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறும் அரசு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகையை மட்டும் பறிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே மதம் மாறுபவர்களின் சமூக மற்றும் கல்வியின் முன்னேற்றம் கருதி ஒருவர் மதம் மாறுவதால் அவர் பெற்று வந்த சலுகைகளை பறிக்காமல் அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

6. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
source:http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: