1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
2. வானவர்கள் (மலக்குகள்) மீது நம்பிக்கை3. இறைவேதங்கள் மீது நம்பிக்கை
4. இறைதூதர்கள் மீது நம்பிக்கை
5. மறுமையின் மீது நம்பிக்கை
6. விதியின் மீது நம்பிக்கை
1. அல்லாஹ்வை நம்புவது
அல்லாஹ் ஆதியிலிருந்து தொடர்ந்து இருந்து வருகின்றான்.விண்ணையும், மண்ணையும், அகிலங்கள் அனைத்தையுமே படைத்து, தன்னந்தனியாக நிர்வகிப்பவனாக இருக்கின்றான். இவற்றைப் படைபபதிலோ, நிர்வகிப்பதிலோ அவனுக்குத் துணையாக, இணையாக யாரும் இல்லை என உறுதி கூறுதல்; அத்துடன் அவன் எவ்விதமான மாசு மருவுமற்றவன்; அவன் தூய்மையானவன்; இன்னும் அவனே எல்லாவித நற்பண்புகளுக்கும், நிறைகுணங்களுக்கும் உரிமையாளனாகவும், ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கின்றான் என்று ஏற்றுக் கொள்வதும் ஆகும்.
2. மலக்குகளை நம்புவது
மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனுக்கு மாறு செய்வதில்லை. எந்நேரமும் அல்லாஹ்விற்கு வணக்கம் புரிவதிலும் கீழ்ப்படிவதிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். வாய்மையான பணியாளனைப் போன்று, அதிபதியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்ற அவன் திருமுன் கை கட்டி காத்து நிற்கிறார்கள். உலகில் நற்செய்தி புரிபவர்களுக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள் என்று உறுதியாக நம்புவதாகும்.
3. இறைவேதத்தை நம்புவது
தூயவனான அல்லாஹ் தன் திருத்தூதர்கள வாயிலாக அவ்வப்போது இறக்கியருளிய வழிகாட்டும் வேதங்கள் அனைத்தையும் உண்மையானவை என ஏற்றுக் கொள்வதாகும். அவற்றில் இறுதியானது திருக்குர்ஆன் ஆகும். அல்லாஹ் இந்த வேதத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயிலாக அனுப்பினான். அது தெளிவான தூய வேதமாகத் திகழ்கிறது. அதில் எந்தவித குறைப்பாடும் இல்லை. மேலும் அது எல்லாவிதக் சீர்கேட்டை விட்டும் பாதுகாப்பாய் உள்ளது. எனவே இறைவனின் பால் கொண்டு சென்று சேர்க்கக் கூடிய வேதநூல். இதனைத் தவிர வேறு எதுவும் இப்போது உலகில் இல்லை.
4. இறைத்தூதர்களை நம்புவது
இறைவன் தரப்பிலிருந்து வந்த இறைத்தூதர்கள் அனைவருமே உண்மையாளர்கள் ஆவர். அந்த இறைத்தூதர்கள் அனைவருமே இறைவனின் செய்திகளை கூடுதல் குறைவு ஏதுமின்றி மக்களிடம் சேர்த்தார்கள். இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இனி மனிதர்களின் ஈடேற்றம் அண்ணலாரின் வழிமுறையைப் பின்பற்றுவதிலேயே அடங்கியிருக்கிறது.
5. மறுமையின் மீது நம்பிக்கை
அல்லாஹ் அனைத்திற்குமே ஒரு முடிவு காலத்தை நிர்ணயித்துள்ளான். இந்த உலகத்திற்கும் ஒரு முடிவு உண்டு. இறந்துவிட்ட அனைவரையும் அதற்குப்பின் அவர்களுடைய அடக்கத்தலங்களை விட்டு எழுப்புவான். அப்போது ஒவ்வொருவரிடமும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரணை செய்வான். அந்த நாளில் நன்மைக்கும், தீமைக்கும் தகுந்த கூலி கொடுப்பான். ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவான். இவ்வாறு இறுதி நாளை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
6. விதியின் மீது நம்பிக்கை
உலகில் நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் இறைவனின் கட்டளையினால்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு அவனுடைய கட்டளை மட்டுமே செயல்படுகிறது. அவன் விரும்புவது ஒன்று, உலகம் செயல்படும் விதம் வேறொன்று எனும் நிலை கிடையாது. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும், நேர்வழிக்கும், வழிகேட்டிற்கும் நியதி ஒன்று உண்டு, அதனை அவன் ஆதியிலேயே நிர்ணயித்து விட்டான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியார்கள் மீது வருகின்ற துன்பங்கள்,அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள், அவர்களுக்கு நேரிடும் சோதனைகள்- இவையனைத்தும் அவர்களுடைய இறைவனின் கட்டளைப்படி முன்பே அவன் நிர்ணயித்து நியதிகள், விதிகளின்படிதான் நேருகின்றன.
உங்கள் சகோதரி
ஆயிஷா பானு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக