கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.

அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.


இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலைவாய்ப்புக்களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா? கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுவது ஏன்? இந்த அவல நிலைகளை சச்சார் மற்றும் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். முன்னர் பெற்று வந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித ஒதுக்கீடு என்பதை வாபஸ் பெற்று, முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் போதுமானதல்ல என்று திமுக மற்றும் அதிமுக ஆகியன ஒப்புக் கொண்டுள்ளதால், ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்ததை நினைவூட்டும் வகையில் தமிழக ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினரை டி.என்.டி.ஜே அழைக்கிறது.

தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னைக் காட்டி விலை பேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய். இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமால் தடுத்து நிறுத்திட நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.

0 கருத்துகள்: