பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி
( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )
அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் , ஹதீது, கணிதம், அறிவியல் , வானியல் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிடுகின்றார் . அத்தகைய காலத்தில் கணிதம், மருத்துவம், இயற்பியல் வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சாதனைகள் பலவற்றை உலகளவில் செய்து பெருமிதம் மிக்கவர்களாக இஸ்லாமியர் அவனியில் உலா வந்தார்கள். ஆனால் அதன்பின் அவர்களது அறிவுத்திறன் ஒழிந்து கொண்டுவிட்டது. அதே சமயத்தில் யூதர்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமை செலுத்தத் தொடங்கினார்கள் .
இன்று உலகளவில் யூதர்கள் 140 லட்சம் பேர் உள்ளனர் முஸலிம் களோ 1500 லட்சம் பேர் உள்ளனர் அதாவது ஒரு யூதருக்கு 107 முஸ்லிம்கள் என்ற கணக்கில் இருக்கிறார்கள் உலகளவிலும் இந்திய அளவிலும் மக்கள் தொகையில் ஐவரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். ஆயினும் நிலைமை எவ்வாறு உள்ளது ?
விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், கம்யூனிஸத்தந்தை எனக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் உள்பட உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் யூதர்களே ஆவர்; கடந்த 105 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற யூதர்கள் 180 பேர்; ஆனால் முஸ்லிம்களோ 3 பேர்தாம்; மருத்துவத்துறையில் தடுப்பூசி, சிறுநீரகச் சுத்திகரிப்பு, குடும்ப நலம், கருவியல், குடலியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் புதிய கண்டிபிடிப்புகளைத் தந்து சாதனைப் படைத்தவர் களும் யூதர்களே ஆவர் கோகோ கோலா போலோ லெவிஸ் ஜீன்ஸ் கணிணியியல் ஆரகிள் டெல் கம்ப்யூட்டர்ஸ் முதலான பல்வேறு வணிகத் துறைகளிலும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருப்பவர் களும் யூதர்களாவர்.
உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெரும்பான்மையான ஆதிக்கம் யூதர்களுடையதே ஆகும்; ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் பல செய்தி நிறுவனங்களும் அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கின்றன; அவ்வாறிருக்கும் போது உலகளவில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கர வாதிகளாவும் வன்முறையாளர்களாகவும் சித்திரிக்காமல் இருப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
கல்வித் துறையில் கணிப்பைச் செலுத்தினால் 57 இஸ்லாமிய நாடுகளில் 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம்; அமெரிக்காவில் மட்டுமே 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன ; பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் கணக்கிட்டால் முதல் தரத்திலிருந்து 500 தரம் முடிய உள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்று கூட ஒரு முஸ்லிம் நாட்டின் பல்கலைக்கழகம் கிடையாது.
கிறிஸ்துவ நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 90 ஆக இருக்கும் போது முஸ்லிம் நாடுகளில் படித்தவர்களின் சதவிகிதம் 40 ஆகவே இருக்கிறது; கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் 15 நாடுகளில் படித்தவர்கள் சதவிகிதம் 100 ஆக இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் கூட படித்தவர்கள் 100 சதவிகிதம் இல்லை ; கிறிஸ்தவ நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு 1000 பேர் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கும்போது முஸ்லிம் நாடுகளில் 10 இலட்சம் மக்களுக்கு வெறும் 50 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்; உலகளவில் முஸ்லிம்களின் இத்தகைய நிலையைக் கண்ணுறும்போது வேதனையே விஞ்சுகிறது .
உலகளாவிய இந்த நிலைமையின் தாக்கத்தையே இந்தியாவிலும் காண முடிகிறது; இந்தியாவில் முஸ்லிம்கள் 16 சதவிகிதம் இருப்பதாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறத;. நாமோ 22 லிருந்து 25 சதவிகிதம் இருக்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்கள் 5.8 சதவிகிதமென அரசுப் புள்ளிவிவரம் காட்டுகிறது; நாமோ 10 லிருந்து 13 சதவிகிதம் இருக்கிறோம். 10 சதவிகிதம் எனக் கணக்கிட்டாலும் தமிழக சட்டமன்ற 234 உறுப்பினர்களில் 23 அல்லது 24 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 7 பேர்தாம் ! பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 120 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ 40 க்கும் குறைவே !
நிர்வாகத்துறையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளில் 2 சதவிகிதமே முஸ்லிம்கள்; தமிழகத்தில் 527 பேரில் 18 பேரும் குரூப் ஏ அதிகாரிகள் 540 பேரில் 15 பேரும்தாம் முஸ்லிம்கள் .நீதித்துறையில் கணக்கிட்டால் உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை முஸ்லிம் நீதிபதிகள் 1 சதவிகிதமே இருக்கிறார்கள்; ஒருகாலத்தில் தமிழக உயர்நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் இருந்தபோது 4 முஸ்லிம் நீதிபதிகள் இருந்தனர். இன்று 49 நீதிபதிகள் இருக்கு மிடத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவில்லை.
ஊடகத்துறையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி பத்திரிகை ஆசிரியர், துணை ஆசிரியர், உரிமையாளர் உள்ளிட்ட பத்திரிகை யாளர்களில் 55 சதவிகிதம் பேர் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களாக உள்ளனர் ;முஸ்லிம்களோ 3 சதவிகிதம் தாம் உள்ளனர். இவ்வாறே ஒரு ஜனநாயக நாட்டின் தூண்களாகக் கருதப்படும் ஆட்சி ,நிர்வாகம், நீதி, ஊடகம் ஆகிய நான்குத் துறைகளிலுமே முஸ்லிம்களுடைய நிலை கவலையளிப்பதாகவே இருக்கிறது.
இந்திய நாட்டில் முஸ்லிம் தணிக்கையாளர் 1 சதவிகிதமே ;பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் 3 சதவிகிதத்தை எட்டவில்லை; வங்கி போன்ற துறைப் பணிகளிலே 2 . .2 சதவிகித மாகவே முஸ்லிம்கள் உள்ளனர்; அரசுத்துறையானாலும் அரசு சார்ந்த துறையானாலும் தனியார் துறையானாலும் முஸ்லிம்கள் 3 சதவிகிதத் திற்கும் குறைவாகவே வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களில் 94.61 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனச் சுட்டுகிறது சச்சார் குழு அட்டவணை 10ல் பாகம் 3ல் பக்கம் 204ல் முஸ்லிம்களில் 93.3 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர்; 49 சதவிகிதம் முஸ்லிம்கள் தினக் கூலிகளாக இருக்கிறார்கள்.
கல்வித்துறையில் இன்றைக்கும் இந்தியாவில் 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட முஸ்லிம் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேர் மழைக்குக்கூட பள்ளிக் கூடத்திற்குள் ஒதுங்குவதில்லை ;ஆரம்பத்தில் பள்ளியில் சேர்பவர்களிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்வோர் 11.5 சதவிகிதமே ஆகும்; பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 2 சதவிகிதமே உள்ளனர்; பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் 0.78 சதவிகிதமே என்றால் கல்வியில் நமது நிலையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தியாவில் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதத்திற்கும் குறைவே என்றபோதிலும் இன்று இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவிகிதமும் ஊனமுற்றோருக்கான கல்வி நிறுவனங்களில் 25 சதவிகிதமும் கிறிஸ்தவர்களுக்குச்சொந்தமானவை யாகும்; கல்வி வேலைவாய்ப்புகளில் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் அதிக சதவிகிதம் பேர் இருப்பதாலேயே தமிழகத்தின் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தேவையில்லையெனக் கூறிவிட்டனர்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 3.5 சதவிகித ஒதுக்கீட்டால் சாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது, சில துறையில் பாதக நிலையும் ஏற்பட்டிருக்கிறது; சாதகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பாதகத்தை எடுத்துக்கூறிக் களைந்து கொள்ளவும் முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும்; வருங்காலத்தில் இந்த இட அளவை அதிகப்படுத்தவும் போராடியாக வேண்டும்.
அக்காலத்தில் இந்தியாவில் கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டு மல்லாது மாகாண சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு இருந்து வந்தது ஆனால் அவை காலத்தின் கோலத்தில் காணாமல் போயின. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திடவும் மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியிருக்கிறது.
மத்திய –மாநில அரசுகளிடம் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராடும் அதே சமயம் நம்மை நாமே கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர்த்திக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பதை மறந்து விடக்கூடாது. பெரும்பாலும் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் இருக்குமிடத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருப்பதைக் காணலாம். அதே போன்று இடவசதியும் பொருள் வசதியும் உள்ள பள்ளிவாசல்களில் மார்க்கக் கல்வியும் நடப்புக் கல்வியும் இணைந்து கற்பிக்கப்படும் தரமுள்ள பிரைமரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஆரம்பப் பள்ளியில் நுழையும் ஏறக்குறைய 70 சதவிகித மாணவர்கள் 11 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட நிலையை அடையும் போது மூன்றில் ஒரு பங்கினாராகச் சுருங்கி விடுகின்றனர். மேற்பட்டப் படிப்பு வகுப்பைத் தொடுபவர்கள் 2 சதவிகிதமாக மேலும் சுருக்கம் காணுகின்றனர். பெண் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் ஐந்தாம் வகுப்புக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு முன்னர் மேலும் 57 சதவிகிதம் மாணவிகள் படிப்பை நிறுத்திவிடும் போக்கு சமுதாயத்திலிருந்து முற்றிலுமாகக் களையப் படவேண்டும். அதற்கான முழுமுயற்சிகளைப் புயல்கால அடிப்படையில் முஸ்லிம்கள் எடுத்தாக வேண்டும் .
உலக அளவில் யூத சகோதரர்களும் இந்திய அளவில் பிராமணச் சகோதரர்களும் குறைந்த சதவிகித அளவே இருந்தாலும் தங்களது அறிவுத் திறனால் உயர்ந்திருப்பதைப் போன்று முஸ்லிம் சமுதாயமும் முன்னேற வேண்டியுள்ளது அத்தியாவசியமாகும். இறைமறை நெறியும் திருநபி ( ஸல் ) வழியும் வற்புறுத்துகிற அறிவை – கல்வியை – இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து நிலைகளிலும் முஸ்லிம்கள் முன்னேற இன்றைய தேவை அறிவுப் புரட்சியே ஆகும் .
ஓங்கட்டும் அறிவுப் புரட்சி....
ஒளிரட்டும் சமுதாயம்...
கூடட்டும் இறையருள்....
( IMCT யின் சிறப்புமலர் 2009 லிருந்து )
இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை ( IMCT )
துபை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக