கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களைப் போன்ற ஒரு தலைவர் தமிழ்மண்ணில் பிறந்தது நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்த காட்சிகளைக் காண நாம் பாக்கியம் செய்தவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தினர் நம்பி பின் தொடர்ந்து போகும் பல மாறுபட்ட இயக்கங்களின் தலைவர்கள் இத்தகைய தகுதிகளைப் பெற்று இருப்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது. காயிதே மில்லத் அவர்களைப் பற்றி இன்னும் இரண்டொரு செய்திகளை சுட்டிக் காட்டிவிட்டு தொடர எண்ணுகிறேன்.
காயிதே மில்லத் அவர்களின் புகழுக்கு மணிமகுடம் வைப்பது அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரை. ஒரு தமிழனாக தனது தாய்மொழியாம் தமிழ்தான் இந்த நாட்டின் ஆட்சிமொழியாக வேண்டுமென்று துணிச்சலாக வாதாடிய வரலாறு அவருக்குண்டு. இறுதியில் அவர் கருத்து வாக்கெடுப்புக்கு விடப் பட்டபோது இராஜேந்திர பிரசாத் போட்ட ஒரே ஒரு ஓட்டின் வித்தியாசத்தால் தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்து பெறும் முயற்சி தோல்வியடைந்தது. இல்லாவிட்டால் ஜிஸ் தேச மே கங்கா பஹ்திகே என்று பாடம் இருக்காது. இந்நாட்டில் காவிரி ஓடுகிறது என்றே பாடம் படிக்கப் பட்டுக் கொண்டு இருக்கும்.
நாடு இரண்டாக உடைந்ததற்குக் காரணம் யார்? ஜின்னாவா? நேருவா? நடுநிலையாளர்கள் அறிவார்கள். விடுதலை பெற தயாராகிக் கொண்டிருந்த இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்? சகாக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனச் சாக்குச் சொல்லி, கடைசி நேர வாய்ப்பையும் கைகழுவி, இந்தியா இரண்டாக உடையக் காரணமாக இருந்தது நேருபிரான் அல்லவா?
நேரு அரசியலில் தனது போட்டியாளர்களாகக் கருதியது இருவரைத்தான். ஒருவர் நேதாஜி. மற்றவர் ஜின்னா. ஒன்று நேருவுக்கு தலைவலி. மற்றது திருகுவலி. இந்தியா விடுதலைப் பெறப் போகிறது. நேதாஜி இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை. ஜின்னாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து இந்தியா உடையாமல் காப்பாற்றலாம். ஆனால் தனது திருகுவலி நிரந்தரமாகிவிடும். சிறந்த சட்ட மேதையான ஜின்னா அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவியை செயல் அதிகாரமுள்ள பதவியாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால்? தட்டிக் கேட்பார். யாருமின்றி இந்தியாவைத் தன்னால் ஆள முடியாதே? நேருவின் இந்த சர்வாதிகார மனோபாவத்தால்தான் நாடு பிளவுண்டது. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல இந்தியாவில் எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களும்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் காங்கிரசாரால் தூற்றப்பட்டார்கள்.
இந்தச் சூழலில்தான் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதற்காகக் கூடிய கூட்டம் அது.
கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.
நமது காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்றே, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார். எவ்வாறு?
கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்,
“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!” எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!
இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக வல்லபாய் பட்டேல் குற்றம் சாட்டினார்.
அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி பார்ப்பன ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை நாங்களே கட்சி நடத்திக் கொள்வோம் உங்கள் பருப்பை எங்களிடம் வேகவைக்கப் பார்க்காதீர்கள் என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.
நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.
அப்படிப்பட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் அலங்கரித்த எதிர்க் கட்சித்தலைவர் பதவியின் நாற்காலியில் இன்று யார் யார் பெயரோ எழுதப்பட்டு அமர ஆள் இல்லாமல் அல்லது அமரும் ஆள் வந்து அமராமல் அல்லது வரவிடாமல் ஒட்டடை படிந்து கிடக்கிறது என்பது தமிழக சட்டமன்றத்தின் அழுக்குப் படிந்த வரலாறு.
அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது , சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான திரு. பி.ஜி. கருத்திருமன் என்பவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து அந்தப் பதவியை அலங்கரித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. விநாயகம் என்கிற உறுப்பினரும் , சுதந்திரா கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹண்டே அவர்களும் இருந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் கருத்துச்செரிவும் கண்ணியமும் காத்தவை. சட்டமன்றத்தின் பொற்காலம் என்று இதைக் கூறலாம்.
திரு. விநாயகம் அவர்கள் கேள்வி கேட்பதில் வித்தகர். முதல்வர் அண்ணா அழகாக பதில் சொல்வார். ஒருமுறை தொடர்ந்து விநாயகம் கேள்விகள் கேட்ட போது எரிச்சலுற்ற ஆளும் கட்சி உறுப்பினர் விநாயகம் அவர்களைப் பார்த்து, “இப்படியே எவ்வளவு கேள்விகள் கேட்பீர்கள்?” என்று கோபமாக கேட்டார். அண்ணா அமைதியுடன் எழுந்து “ அவர் கேட்கட்டும் இன்னும் கேட்கட்டும் அவர் பெயரிலேயே வினா இருப்பதால் அப்படித்தான் கேட்பார்” என்று கூறினார். சட்டமன்றத்தில் வங்கக் கடலின் அலைகள் சிரிப்பொலிகளாக எழுந்தன. ஒரு இலக்கிய மன்றத்தின் கூட்டம் நடைபெறுவதுபோல் சட்டமன்றக் கூட்டங்கள் நடக்கும். இன்றோ சட்டமன்றம் வசவுகளின் மன்றமாகிவிட்டது.
அதே திரு. விநாயகம் அவர்கள் அண்ணா சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையின் விமர்சனத்தில் பேசும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் திமுக ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்கிற தோரணையில் “ YOUR DAYS ARE NUMBERED “ என்று கூறினார். ஆனால் அண்ணா அமைதியுடன் “ NO! OUR STEPS ARE MEASURED” என்று பதில் அளித்தார். “ உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன “ என்று சொல்லிய வினாயகத்துக்கு, “ நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப் படுகிறது “ என்ற அற்புதமான பதிலை அளித்தார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்று கொஞ்ச காலத்துக்குள் அண்ணா கடும் நோய்வாய்ப் பட்டார். இறந்தும் போனார். இறுதி அஞ்சலியில் தன் முகத்தை அண்ணாவின் கால்களுக்கு இடையே பதித்துக் கொண்டு விநாயகம் கதறி அழுதார். உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று தான் கூறியது அரம் பாடியதாக ஆகிவிட்டதோ என்று கதறினார். இங்கு பதிய வேண்டிய இன்னொரு தகவல் விநாயகமும் அண்ணாவும் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கல்லூரித் தோழர்கள் என்பதாகும். இது அன்றைய அரசியல் நாகரீகம். இன்று இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எதிர்க் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் இறப்பைக் கொண்டாடுவார்கள்.
அண்ணாவின் ஆட்சிகாலத்தில் உணவுக்குப் புளித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று புலிப் பிரச்னைகள் இந்த அளவுக்குக் கிடையாது. புளிப் பிரச்னைதான். மிகக் கூடுதலான விலைக்குக் கூட தமிழகத்தில் புளி கிடைக்கவில்லை. அந்த நேரம் காங்கிரசின் ஆட்சியில் இருந்த கர்நாடகத்தின் மைசூர் பகுதிகளில் புளி ஏகபோகமாக விளைந்து இருந்தது. முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவரும் கலந்து பேசி மைசூரில் இருந்து மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு தட்டுப் பாடு இன்றி புளி கொண்டுவர உதவினர். புளிப் பஞ்சம் நீங்கியது. இதுபற்றி ஒரு முறை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது திரு. பி.ஜி. கருத்திருமன் எழுந்து , “ புளிப் பிரச்னை யாரால் தீர்க்கப் பட்டது ?” என்று மிகவும் மிதப்பாகக் கேட்டார். உடனே அண்ணா எழுந்து “ புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின் உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள். கருத்திருமனும் நன்றாக சிரித்துவிட்டார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை. அப்போது இருந்த இதுபோல் அரசியல் நாகரிகம் இப்போது உண்டா? இன்ஷா அல்லாஹ் இன்னும் சொல்லலாம்.
நேற்று ! இன்று ! நாளை ! - தொடரிலிருந்து.
நேற்று ! இன்று ! நாளை ! - தொடரிலிருந்து.
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக