கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ )
 “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27)


 உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு அவசியம் தானா? வாழ்விற்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துவிட்டு, ஆடம்பரத்தை தூக்கி எறிய வேண்டும்.

 அவசியம் என்பது அத்தியாவசியமானது. அவசியமற்ற யாவும் ஆடம்பரமும், அனாவசியமான வீண் செலவும் ஆகும்.

 ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரளி) அவர்கள் கூறுவது
 “நீர் நாடியதையெல்லாம் சாப்பிடுவ (அனுபவிப்ப) து வீண் விரயம் (ஆடம்பரம்) ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (நூல்: திர்மிதீ) ஆடம்பரமில்லாத, ஆரவாரமில்லாத வாழ்வு எளிமையின் அடையாளம் ஆகும். ஆரவாரமும், ஆடம்பரமான வாழ்வும் பெருமையின் அடையாளம் ஆகும்.

 உண்ணும் உணவிலும் குடிக்கும் குடிப்பிலும், உடுத்தும் உடுப்பிலும், செலவு செய்யும் தானதர்மத்திலும் பெருமையும், வீண்விரயமும் வந்துவிடக் கூடாது. இவ்வாறு அமையும் செயல்கள் யாவும் ஆடம்பரமே! என இஸ்லாம் கூறுகிறது.

 உணவு, குடிநீர், ஆடை, வருமானம் ஆகியவை இல்லாமல், வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனையோ ஏழைகளும், நலிந்தவர்களும் வாழும் இப்புவியில், ஆடம்பரக்காரர்கள்செய்யும் வீண் செலவுகளை, ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் செய்தால், அவர்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும். மேலும் வறுமையில் வாடுபவர்களுக்கு மறுவாழ்வும் கிடைக்கும்.


 ஆடம்பரத்திற்காக வீண் விரயம் செய்பவர்களை இறைவன் ஒருபோதும் நேசிப்பது கிடையாது.

 “உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. -அல்குர்ஆன் (7: 31)
 “பெருமையும், வீண்விரயமும் அமையாத வரைக்கும் உணவையும், குடிப்பையும் அல்லாஹ் ஆகுமானதாக ஆக்கியுள்ளான்”.
 அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி), அல்ஹதீஸ், நூல் இப்னுஜரீர்

 “வீண் விரயமும், பெருமையும் இல்லாமல் நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள், தானதர்மம் செய்யுங்கள். ஏனெனில், அல்லாஹ் ஓர் அடியானுக்கு அளித்த வெகுமதியை அடியானிடமிருந்து அவன் காணும்போது மகிழ்ச்சி அடைகிறான்”. -அல்ஹதீஸ் (நூல் : அஹ்மது)

 “இன்னும் உறவினருக்கு அவருடைய உரிமைகளை கொடுப்பீராக, மேலும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் கொடுப்பீராக ! வீணாகப் பொருளை விரயஞ் செய்யாதீர். நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்”. -அல்குர்ஆன் (17: 26, 27) 

ஆடம்பரமாக செலவு செய்வது நன்றி கெட்ட ஷைத்தானின் குணமாக உள்ளதால்தான், ஆடம்பரத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. ஆடம்பரத்தை தவிர்த்தால் அல்லாஹ்வின் அன்பு கிடைக்கும். அல்லாஹ்வின் நல்லடியார்கள் ஆடம்பரமாக செலவு செய்ய மாட்டார்கள். மேலும் கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இரண்டுக்கும் மத்திய நிலையை கடைபிடிப்பார்கள், எளிமையாக வாழ்வார்கள்

. “இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள்; (உலோபித் தன மாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்”. -அல்குர்ஆன் (25 : 67)


 ஹள்ரத் அனஸ் (ரளி) அவர்கள் கூறுவது :
 “ஹள்ரத் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரளி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும், ஹள்ரத் ஸஅதுபின் ரபீஉ(ரளி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஹள்ரத் ஸஅது (ரளி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரளி) அவர்களிடம் ‘எனது செல்வத்தை சரிபாதியாக உமக்கு பிரித்துத் தருகிறேன், (எனது மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மணமுடித்துத் தருகிறேன் ! எனக் கூறினார். அதற்கு ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரளி) அவர்கள் ‘உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக ! எனக்கு கடை வீதியைக் காட்டுங்கள் ! எனக் கூறினார்கள். அவர்கள் பாலாடைக் கட்டியையும், நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘என்ன விசேஷம்?’ எனக்கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே ! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?’ எனக்கேட்டார்கள். ‘ஒரு பேரிச்சங்கொட்டை எடைக்கு தங்கம்’ என அவர்கள் பதில் கூறினார்கள். அதற்கு ‘ஓர் ஆட்டையேனும் மணவிருந்து அளிப்பீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. -புகாரீ : 2049 

முஸ்லிம்களே ! நமது திருமணம் எங்கே? நபித்தோழரின் திருமணம் எங்கே? என சிந்தித்துப் பாருங்கள். இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் ஆடம்பரம் கோரத்தாண்டவமாடுகிறது. செல்வந்தர்களைப் பார்த்து ஏழை, எளியோரும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த, கந்து வட்டியும், ஸ்பீடு வட்டியும் வாங்கி வீண்செலவு செய்வதை காணுகின்றோம்.

 நம் சமுதாய மக்கள் முன்பு திருமணத்தில் ஆடம்பரத்தை காட்டினார்கள். தற்சமயம் திருமணத்திற்கு நிகராக நிச்சயதார்த்தத்திற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள்.

 திருமண நிச்சயத்தை தடபுடலாக நடத்த ஊர்மக்களையும், ஜமா அத்தார்களையும், சொந்தங்களையும் அழைத்து, திருமண மண்டபத்தையும் ஏற்பாடு செய்து, வந்தவர்களுக்கு விருந்தும் கொடுக்கிறார்கள். விருந்தோம்பல் நபிவழிதான். அதற்கு பலவழிகள் இருக்கின்றன. திருமண நிச்சயத்தை தடபுடலாகவும், ஆடம்பரமாகவும் நடத்துவது நபிவழி கிடையாது. நிச்சயத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தை வைத்து ஒரு திருமணத்தையே நடத்தி விடலாம்.

 இதற்கு பிறகு, திருமண செலவு இருக்கிறது. அதிலும் ஆடம்பரங்களும், வீண் செலவுகளும் தாண்டவமாடுகின்றன. மாப்பிள்ளையை அழைத்து வர சாரட் வண்டி அல்லது கார், பாண்டு வாத்தியங்கள், வான வேடிக்கைகள், வானளாவிய கட் அவுட்கள், மாப்பிள்ளையையே மூடி மறைக்கும் வண்ண வண்ணமலர்கள், திருமண மண்டபத்தை அலங்கரிக்கும் பந்தல்கள், வாடகை நாற்காலிகள், ஆடம்பர டெக்கரேசன்கள், கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், காதை கிழிக்கும் ஒலி பெருக்கிகள், இசைக் கச்சேரிகள், வீடியோ மற்றும் திருமண சாப்பாடு, மறுவீட்டுச் சாப்பாடு, திருமண மண்டபச் செலவு, வர(ட்டு) தட்சணை, சீர்வரிசைகள், மணப்பெண்ணுக்கு நகைகள், மணமகனுக்கு செயின்கள், மற்றும் கை கடிகாரம், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கைப்பை நிறைய பொருட்கள், வாழ்த்து அட்டைகள், வால்போஸ்டர்கள், பத்திரிகை விளம்பரங்கள் இன்னும் இவற்றுக்கு ஒப்பான ஆடம்பரமான வீண் செலவுகளை திருமண இரு வீட்டார்கள் செய்யும் போது மனவேதனையாக இருக்கிறது. எளிமையாக நடத்த வேண்டிய திருமணத்தை முஸ்லிம்கள் கடுமையாக ஆக்கிவிட்டார்கள்.

 “செலவில் குறைந்த திருமணமே பரக்கத நிறைந்ததாக அமையும்”. -அல்ஹதீஸ் (அஹ்மது : 24529) 

திருமண வாழ்வு சிறக்க இறைவனின் அருள்வளம் கிடைக்க திருமண ஆடம்பர செலவுகளையும், வீண் செலவுகளையும் முஸ்லிம்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். எளிமையே நபிவழி! ஆடம்பரம் ஷைத்தானின் வழி. நபிவழி நடப்போம் ! நாயன் அல்லாஹ்வின் அருள் பெறுவோம் !
 நன்றி :www.mudukulathur.com 
குர்ஆனின் குரல் ஏப்ரல் 2012

0 கருத்துகள்: