கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை!

நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில் செருப்புக்கடை ஒன்றும் சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.

சுற்றிலும் அநேக கிராமங்களைக் கொண்டிருக்கும் மயிலாடுதுறை எப்போதும் வியாபாரம் களைகட்டும் வணிக நகரமாகும். தீபாவளிப் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என்று 'கொண்டாட்டக் காலமாய்' போய்விட இப்போது இன்னும் மும்முரம். உள்ளாட்சித் தேர்தலுக்காக விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், மினி ரங்கநாதன் தெருவைப் போலவே பெரிய கடைத் தெரு 'காட்சி'யளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

மூன்றடுக்கு செருப்புக் கடையான "ஜனதா சப்பல்ஸில்" 'எப்படியோ' தீ பிடித்துவிட, அந்தத் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுக் கடைகள் வேறு உள்ளுக்குள் 'பயமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும், தீ மேலும் பரவாமல் அணைப்பதில் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையும் ஒற்றுமையும் மெச்சத் தகுந்த விதத்தில் இருந்தன என்றால், இந்த 'ஆர்வக்கோளாறு' பொதுமக்கள் தான் தீயணைப்பு வண்டிகளின் நடமாட்டத்திற்குத் தடையாக அமைந்திருந்தனர். வேதனை நேரத்திலும் வேடிக்கை மட்டுமே பார்க்கவும் சிலர் இருக்கிறார்களே!

உயிரிழப்பு ஏற்படாமல் இருந்தது பெரும் ஆறுதல். அதைப்போலவே, அந்தத் தேர்தல் மும்முரத்திலும் 'தேர்தலாவது, மண்ணாவது' என்று ஓடோடி வந்து உதவிய அதிமுகவின் செந்தமிழன், திமுக வின் செல்வராஜ் (குண்டாமணி), தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பால அருள்செல்வன், திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்த்தகர் சங்க பாண்டு, சீமாட்டி கடை உரிமையாளர், பாஜகவின் நாஞ்சில்பாலு, உடனடியாக நேரில் வந்திருந்து, வேண்டிய உதவிகளைத் தனது கைபேசி மூலமே முடுக்கி விட்ட ஒ.பி.எஸ் மணியன் (நாடாளு மன்ற உறுப்பினர்) ஆகிய அரசியல்வாதிகளின் ஒற்றுமை இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.

அசம்பாவிதங்கள் நிகழும் போது மட்டும் அபூர்வமாக வெளிப்படும் இந்த ஒற்றுமை, எல்லா காலங்களிலும் வெளிப்பட்டால் எப்படியிருக்கும்!. பேரிடர் தீயில் பூத்த இந்த ஒற்றுமை உணர்வு, எந்தப் பெருமழையிலும் அடித்துச் செல்லப்படாதிருக்கப் பிரார்த்திப்போம்!.



0 கருத்துகள்: