கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

எது இலவசமாக கொடுக்கப்பட வேண்டும்?

இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.


அரிசி இலவசம் ஆனால் குடிதண்ணீர் 30 ரூபாய்! தொலைக்காட்சி  இலவசம் ஆனால் மின்சாரம் 3 மணிநேரம் வராது! மடிகணினி இலவசம் ஆனால் இணைய இணைப்பு 1000 ரூபாய்! இப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.

உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.

ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான். கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..?

இங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா? மருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும். சிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.

கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமா..? அரிசியிலிருந்து......  ஏதேதோ இலவசமாக் கொடுக்க முடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..?

“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட .. மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“  - என்பது சீனப்பழமொழி.

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்! கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில், வேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்?

இன்றைய நிலையென்ன..? பணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை! “வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.  இலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.-  (P. குணசேகரன் Senior Civil & Structural Designer. தோஹா,கத்தார். )
...யாழினி...

0 கருத்துகள்: