கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அருகி வரும் அரிசி!

உலகின் பல கோடி மக்களின் அத்தியாவசிய உணவாக அரிசி திகழ்கிறது. இந்தியா முதல் வியட்னாம் வரை அரிசி ஒரு கலாச்சாரச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. அது நமது பாரம்பரியத்தைப் பறை சாற்றுகின்றது. நமது அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த அரிசியின் எதிர்காலம் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் கவலையை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவின் முக்கிய உணவான அரிசிக்கு அங்கே பிரகாசமான எதிர்காலம் இல்லை.

பசுமைப் புரட்சி எல்லாம் பொய்த்துப்போன மழையாகிவிட்டது. கடந்த 2004ம் வருடம் கேரளாவில் கொச்சிக்கு அருகில் கும்பளங்கி என்ற இடத்தில் "அரிசியைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விளைவாக "தென்னிந்திய அரிசிப் பேரவை" ஒன்று தொடங்கப்பட்டது.

இப்படி அமைப்பை உருவாக்கி அரிசியைக் காக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

காரணம் இருக்கிறது. கேரளாவில் முன்பு 8.5 லட்சம் ஹெக்டேர் நிலம் நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது வெறும் 2.2 லட்சம் ஹெக்டேராகக் குறுகிப் போனது. இதன் விளைவாக, 13.5 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி இன்று 5.5 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. ஆனால் கேரளாவில் மட்டும் 40 லட்சம் டன் நெல் உற்பத்தித் தேவை இருக்கிறது. அதாவது, கேரளாவில் மட்டும் 85 சதவீதம் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால் என்னவாகும் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. கடந்த 5000 வருடங்களுக்கும் மேலாக நாம் அரிசியை அத்தியாவசிய உணவாக உண்டு வருகின்றோம். ஆனால் கண்களுக்குக் குளிர்ச்சியாக 'பச்சைப் பசேல்' என்று நேற்று வரை நெல் வயல்களாக இருந்த நிலங்கள் இன்று மாயமாய் மறைந்து வருகின்றன.

ஏனெனில் பல நெல் வயல்கள் இன்று தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. நகரக் குடியிருப்புகளாக உரு மாறுகின்றன. தொழிற்சாலைகளாக மாறி புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை நீடித்தால் சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டு, அரிசி என்பது ஓர் அரிய பொருளாக மாறி விடும் அபாயம் உள்ளது. எனவே அருகி வரும் அரிசியை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்.
நன்றி;பாலைவனத்தூது

0 கருத்துகள்: